Tuesday, January 2, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 6

கொலம்பஸ் ஆட்சியின் முக்கிய வேலை தங்கச்சுரங்கம் தோண்டுவதும், கப்பலை எடுத்துக் கொண்டு அக்கம்பக்கத்து தீவுகளுக்கு சென்று அடிமைகளை பிடிப்பதும், அந்த நிலபரப்புகளை ஸ்பானிஸ் அரசாங்கத்தின் வட்டத்திற்குள்ளே கொண்டுவருவதும் தான்.

அவற்றில் சில தீவுகள் மனித இனம் அது வரை கால் பதித்திராதவை. அது போன்ற ஒரு தீவில் ஷீல்கள் மற்றும் கடல் சிங்கங்கள் மட்டுமே நிரம்பி வழிய அவற்றை வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள் ஸ்பானிய வீரர்கள். அந்த அப்பாவி ஜீவன்கள் செய்த பாவம், செவ்விந்தியர்களைப் போல் அவ்வீரர்களின் வரவைக்கண்டு பயந்து ஓடாமல் அல்லது அவர்களை வரவேற்காமல் இருந்தது மட்டுமே. அந்த அளவிற்கு குரூர குணத்தை கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்கள்.

எல்லாருக்கும் தங்கம் மட்டுமே குறிக்கோளாக இருந்தது, ஆனால் அத்தீவுகளில் பெரிய அளவிற்கு தங்கம் ஏதும் கிடைக்கவில்லை, கிடைத்த சிறிய அளவு தங்கத்தையும், ஸ்பெயினுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். விவாசயம் போன்ற தொழில் செய்து, பொருள் உற்பத்தி செய்ய ஆட்கள் இல்லை. விளைவு, உணவு பற்றாக்குறை! பஞ்சம்!!! ஸ்பெயினிலிருந்து கொண்டுவந்த பொருட்களும் தீர்ந்து போக, பஞ்சம் தலைவிரித்து ஆடியது, ஸ்பானிய வீரர்களுக்கிடையே உணவுக்காக கலவரம் ஆரம்பித்தது.

அதனால், அட்மிரல் கொலம்பஸ் திருப்பவும் ஸ்பெயின் சென்று, காலனி அமைதியாக தொடர அதனை விரிவாக்கம் செய்ய மேலும் நிறைய பொருளுதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தான். ஸ்பானிய அரசுக்கு இம்முறை முற்றிலுமாக சம்மதமில்லை, ஆயினும் போர்ச்சுகீசிய அரசும், புதிய உலகத்திற்க்கு ஆள் அனுப்ப தயாராகி விட்டதால், ஆரம்பித்த வேலையை ஒழுங்காக நடத்த வேண்டி, போர்ச்சுகீசியரை விட முன்னனியில் இருக்க வேண்டி, மூன்றாம் முறையும் பொருட்கள், வீரர்களை ஏற்பாடு செய்து, கொலம்பஸை புதிய கப்பல்களில் வழியனுப்பியது.

ஆனால் இரண்டாம் முறை ஆரம்பித்த பஞ்சம் அதன் தொடர்ச்சியாக உண்டான வன்முறை எல்லாம் மிகவும் மோசமான நிலையை அடைந்து, தொடர்ந்து கொண்டிருந்தது.

அங்கே பல கசாப்புக்கடைகளில், செவ்விந்தியரின் உடல்கள் நாய்களின் உணவாக கிடைப்பது சர்வ சாதாரணமாக இருந்தது.

Roque Martín என்பவன் வைத்திருந்த நாய் பண்ணையில் அவற்றின் உணவிற்காக எப்போதும் நான்கைந்து செவ்விந்தியரின் உடல்கள் மாட்டிறைச்சியை தொங்க விடுவதைப்போல தலைகீழாக தொங்கவிடபட்டிருந்தது என குறிப்புகளில் உள்ளது.

செவ்விந்தியர்களை நரமாமிசம் உண்ணும் cannibals என குறிப்பிட்ட ஐரோப்பியர்கள், பஞ்சத்தின் போது, அந்த செவ்விந்தியர்களின் மனித இறைச்சி உண்டு வளர்ந்த போர் நாய்களை தங்களின் உணவாக உட்கொண்டார்கள் என்பது தான் உண்மை.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதும், கடைசியில் விழித்துக்கொண்ட ஸ்பெயின் அரசு Francisco de Bobadilla என்பவனை ஆட்சியில் அரமவைத்து கொலம்பஸை கைது செய்தது. புதிய அட்மிரல் இத்தனைக்கும் காரணமான கொலம்பஸையும் அவன் இரு தம்பிகளையும் சங்கிலியில் இணைத்து, கப்பலேற்றி அனுப்பி வைத்தான்.

ஸ்பெயின் வந்தடைந்ததும், அங்கு நடந்த கலவர குற்றங்களை காரணம் காட்டி, அந்நாட்டு அரசு அவனை சிறையில் அடைத்தது. இங்கு முக்கியமாக கவனிக்க பட வேண்டியது, அந்த தண்டனை செவ்விந்தியருக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றங்களுக்காக அல்ல, கலவரம் உருவாகவும், கலவரத்தால் உண்டான ஐரோப்பியரின் உயிர் இழப்பிற்க்காகவும் தான்.

சிறைதண்டனை வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே. சிறை தண்டனைக்குப்பின்னும், ஒரு வழியாக அரசை சமாதானப்படுத்தி நான்காவது முறையாக பயணம் மேற்கொண்டான். ஆனால் அவன் முதலில் காலடி வைத்து, நிர்மானித்த Hispaniola நகரில் அவன் கப்பலை யாரும் அனுமதிக்கவில்லை. அதனால் உயிருக்கு பயந்து இன்றைய கியூபாவின் ஒரு பகுதியாக இருக்கும் தீவில் தஞ்சம் அடைந்து, புயலில் சிக்கி சீரழிந்து, உடல் நலம் குன்றி வேறு வழியின்றி ஸ்பெயின் திரும்பி தன்னுடைய கடைசி காலத்தை கழித்தான்.

ஆனால், அவன் பற்ற வைத்த நெருப்பு அடுத்த 500 ஆண்டுகளுக்கு கொளுந்து விட்டு எரிந்தது.

இத்தகைய கொடுங்கோலனின் நினைவாக அவன் வழி வந்தவர்கள் அவனை அமெரிக்க ஹீரோவாக உருவகப்படுத்தி, 1930 லிருந்து 1934 வரை அன்றைய அமெரிக்க அரசியலில் செல்வாக்கை உபயோகித்து 'கொலம்பஸ் தினம்' எனும் அரசு விடுமுறை தினத்தை உருவாக்கினார்கள்.

பள்ளி பாடங்களில் அவனை ஒரு ஹீரோவாகத்தான் இன்றைக்கும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் பெயரில் ஒரு பெரு நகரமும், பல சிறு ஊர்களும் பல மாகாணங்களில் உள்ளது.

Howard Zinn's A People's History of the United States எனும் புத்தகத்தை படித்து பார்த்தால் கொலம்பஸின் உண்மை முகம் விளங்கும். Howard Zinn -யை தொடர்ந்து பல ஆய்வாலர்கள் தங்களின் புத்தகங்களில், அவனின் முகத்திரையை கிழித்தெறிந்திருக்கிறார்கள்.

அதனால் சில ஆண்டுகளாக (குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளுக்குள் என்று தான் சொல்ல வேண்டும்), சொற்பமே இருக்கும் செவ்விந்தியரின் வம்சாவழியினரும், சில அமெரிக்க நகரங்களும், மேற்கிந்திய தீவு நாடுகளில் சிலவும், கொலம்பஸ் தினத்தை வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாட்களில் செவ்விந்தியர் தினமாக கொண்டாடுகிறது.

கொலம்பஸிடமிருந்து பதவி எற்று கொண்டவனும் அவன் பின் வந்தவர்களும் கூட லேசு பட்டவர்கள் கிடையாது. செவ்விந்தியர்களிடம் கொலம்பஸுக்கும் மேலே கொடூரமாக தான் நடந்து கொண்டார்கள்.

புதிய உலகத்தை அப்போதைய போப் அப்போதைய சூப்பர் பவராக இருந்த ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்லுக்கு பிரித்து கொடுத்து உத்தரவிட்டார். அதன்படி இன்றைய பிரேசில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் போர்ச்சுகல்லுக்கும், கொலம்பஸ் கண்டறிந்த பகுதிகள் மற்றும் அதன் வடக்கு, மேற்கு பகுதிகள் ஸ்பெயினுக்கும் என முடிவானது. அதனால் அன்றைய சூப்பர் பவர்களுக்குள் புதிய உலகத்தால் கொஞ்சகாலத்திற்கு சண்டை வராமல் சமாதானமாக இருந்தது.

இவ்விரு நாடுகள் தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளும் பல தடவை பயணம் செய்து ஒட்டு மொத்த வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தங்களின் காலனியாக அறிவித்தது. இதில் ப்ரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா குறிப்பிட தக்க அளவு பெரும் பகுதிகளை ஆக்கிரமித்தது.

[ரஷ்யா தான் ஆக்கிரமித்து வைத்திருந்த அலாஸ்காவை சொற்ப காசுக்கு அமெரிக்காவிற்கு விற்ற கதை பின்னால் நடந்தது. இன்றைக்கு வட மற்றும் தென் அமெரிக்காவில் பல நாடுகள் உள்ளன. ஆனால அவை பிரிவதற்கு முன் ஒட்டு மொத்தமாக இரு கண்டங்களாக இருந்த போது, அந்த நிலபரப்பிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பல விதமான போர்கள் நடந்தேறியது. இவற்றை பற்றி தனி தொடர் எழுதலாம், அதுவும் பேராசையால் இரத்தமும் உயிரும் இழந்த கதைகள் தான். நேரமும் வரவேற்பும் இருந்தால், இத்தொடரை தொடர்ந்து அந்த கதையை எழுதுகிறேன்].

கொலம்பஸ் காலத்திற்க்கு பிறகு நடந்த கொடூரங்கள் வரும் வாரங்களில்....

Sunday, December 24, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 5

கிடைத்த அடிமைகளை பிடித்துக்கொண்டு, முதல் முறை காலடி பதித்த தீவிற்கு வந்து பார்த்த போது தான் அவர்கள் கட்டி வைத்திருந்த சிறிய கோட்டையான லா நேவிடாட்(La Navidad), தரைமட்டமாக்கப் பட்டுக்கிடந்தது அம்பலமானது. அதில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேரும் காணவில்லை.

அந்த 39 பேரும் செவ்விந்திய பெண்களை தங்களின் அடிமைகளாக பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ் தரமாக நடத்தியதின் விளைவாக சர்ச்சை ஏற்பட்டு, அதனால் உண்டான போரில் கொல்லப்பட்டது கொலம்பஸின் குழுவிற்கு பின்னாளில் தான் தெரிந்தது.

கிடைத்த அடிமைகள் மற்றும், 1200 வீரர்கள் அனைவரும் துரிதமாக செயல் பட்டு, தரைமட்டமாக்கப்பட்ட கோட்டைக்கு பதிலாக புதிதாக ஒரு கோட்டையை சற்று பெரியதாகவே கட்டினார்கள். இம்முறை காலனி அமைப்பதும் ஒரு நோக்கமாக இருந்தபடியால், 12 கப்பல்களிலும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களையும் கொஞ்சம் கொண்டுவந்திருந்தார்கள். அதனால் கட்டுமான பணிகள் மல மலவென நடைப்பெற்றது. ஒரு தேவாலயம், கொலம்பஸ் ஆட்சி செய்வதற்கான அலுவலகம், வீரர்கள் தங்க அறைகள் என பல விஷயங்கள் உள்ளடக்கி இருந்தது அந்த கோட்டை. அக்கோட்டைக்கு, பயணத்திற்கு அனுமதி கொடுத்து பண உதவியும் செய்த ஸ்பெயின் ராணியின் நினைவாக லா இஸபெல்லா(La Isabella) என பெயரிடப்பட்டது. அந்த புதிய கோட்டையில் கொலம்பஸ் அட்மிரல் ஜெனரலாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு தன் ஆட்சியை தொடங்கினான். ஆட்சியை தொடங்கினான் என்பதைக்காட்டிலும், தங்க வேட்டைக்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்தான் என தான் கூறவேண்டும்.

கோட்டை அமைத்து செட்டில் ஆனவுடன், ஆரம்பித்த முதல் வேலை தங்கச்சுரங்கம் தோண்டியது. தோண்டும் வேலை செவ்விந்தியர்களுடையது எனவும், அவர்களை கண்காணிக்கும் வேலை ஸ்பானிய வீரர்களுடையது எனவும் சரி சமமாக பிரித்துக்கொண்டார்கள். பதினான்கு வயதை தொட்ட ஒவ்வொரு செவ்விந்திய ஆணும் கட்டாயமாக சுரங்கப்பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கும். எவ்வளவு உழைத்த போதும் கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகக்குறைவாக இருந்தது. இதனால், செவ்விந்தியர்கள் சரியாக உழைக்காமல் தங்களை ஏமாற்றுகிறார்கள் என நினைத்து கொலம்பஸ் ஒரு ஆணையிட்டான்.

அதாவது ஒவ்வொரு முன்று மாதத்திற்கும், சுரங்க பணியாளர்கள்(அடிமைகள்) ஒவ்வொருவரும் தங்கள் கணக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் தயாரிக்க போதுமான தாதுவை ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அப்படி கொடுப்பவர்களுக்கு பரிசாக ஒரு பித்தளை காசு கிடைக்கும், அதை அவர்கள் தங்களின் கழுத்தில் அடையாளமாக அணிந்து கொள்ளலாம். பித்தளை காசு கிடைத்து, கழுத்தில் போட்டுக்கொண்டவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு நிம்மதி, தொடர்ந்து பணி செய்யலாம்.

சரி, ஆனால் இப்படி குறிப்பிட்ட அளவு தாதுவை ஒப்படைக்காதவர்களுக்கு எந்த பரிசும் கிடைக்கவில்லையா என்கிறீர்களா?

ஏன் இல்லை? பரிசு கிடைத்தது, அவர்களும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள அரசு கொடுத்த பரிசு, அவர்களின் துண்டிக்கப்பட்ட கைகள். ஆம், நீங்கள் படிப்பது உண்மைதான். குறிப்பிட்ட அளவு தாது கொடுக்க முடியாதவர்களின் கைகளை முழங்கை வரை வெட்டி அவர்களின் கழுத்திலேயே மாலையாக அணிவித்தார்கள்.

மேற்படி தண்டனையை மேற்பார்வைப்பார்த்து, தவறாமல் நிறைவேற்றியது கொலம்பஸின் சொந்த தம்பிகள். வெட்டு பட்ட கைகளுக்கு மருத்துவமும் கிடையாது. வெட்டு பட்ட கைகளிலிருந்து, இரத்தம் வெளியேறி இறந்தவர்கள் நிறைய பேர்.

இந்த தண்டனைக்கு பயந்து, மலைகளில் ஓடி ஒழிந்தவர்களின் முடிவு இதைவிட கொடூரமானது. தப்பியவர்களை பிடிக்க வேட்டை நாய்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய்கள் சாதாரணமானவை அல்ல, மனிதனின் ஒவ்வொரு இணைப்பையும் கடித்தே பிரித்து விடும் சக்தி வாய்ந்தது. அவைகளை, எதிர்த்து போராடவும் முடியாது, அவற்றின் பாதுகாப்பிற்காக, அதன் உடல் முழுதும், இரும்பினால் ஆன கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. வேட்டை நாயிடம் மாட்டி கதை முடிந்தவர்களின் உடலும் அந்நாய்களுக்கே சொந்தம். அவற்றின் இரையாக!!!

உயிருடன் இருக்கும் ஆண்களின் ஒரே கடமை சுரங்களில் தங்கத்தாதுவை சேகரிப்பது மட்டும் தான், அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கெடு. அம்மக்களுக்கு ஊசலாடும் கத்தி எப்போதும் தலை மீது தொங்கிக்கொண்டே இருந்தது. தங்கள் குடும்பத்திற்காக உழைக்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது, வேட்டையாட முடியாது அனைத்தும் பெண்களே செய்து, தங்கள் கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இதற்கிடையே வீரர்களின் இச்சைக்கும் பலியாக வேண்டும்.

அப்போதய கத்தோலிய கிருத்துவ மத போதனைப்படி, ஒரு கிருத்துவர் மற்றொரு கிருத்துவரை அடிமையாக பயன்படுத்தக்கூடாது. மத நம்பிக்கை கொண்ட கொலம்பஸ் இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வைக் கண்டுபிடித்தான். செவ்விந்தியர்களை மதம் மாற்ற பாதிரியார்களை அழைத்து வந்திருந்தாலும், அவர்களுக்கு ஞானஸ்தானம் செய்விக்காமல் பார்த்துக்கொண்டான். இதனால் மொத்த மக்கள் தொகையையும் அடிமைகளாக பயன்படுத்திக் கொள்ளலாமே!

தங்க தாது நிறைய கிடைக்காத மண்ணில், இக்கொள்ளையர்களின் ஆசைக்காக தங்கத்தாதுவை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்றால் எப்படி?

செவ்விந்திய ஆண்களின் முடிவு மூன்று வகையில் முடிந்தது. ஒன்று, தாது கிடைக்காமல் கைகள் வெட்டப்பட்டு இரத்தம் இழந்து உண்டானது ஒரு வகை, இரண்டாவது வகை, வேட்டை நாய்களால் கடி பட்டு கொடுரமுறையில் இறப்பது. அத்தேடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு இரையாகவும் ஆனது.

சிலர் இவ்விரு வகை கொடுமைகளுக்கு பயந்து மற்றொரு வகையை தேர்ந்தெடுத்தார்கள். அது தற்கொலை. ஆம் மாஸ் சூசைட் எனப்படும் முறையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள்.

இவையனைத்தும் கொலம்பஸின் தங்க மோகத்தால் உண்டான ஒரே ஒரு சட்டத்தத்தினால்!!!

கொடுமைகள் தொடரும்...

Sunday, December 17, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 4

செவிந்தியர்கள் சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வட அமெரிக்காவும், ஆசியாவும் இணைந்திருந்த நிலப்பரப்பான Bering Strait வழியாக அமெரிக்க கண்டத்திற்குள் கால்நடையாக நுழைந்திருக்கலாம் என வரலாற்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். Bering Strait இப்போது ரஷ்யாவுக்கும் அலாஸ்காவிற்கும் இடைபட்ட சீற்றம் கொண்ட கடல் பகுதியாக உள்ளது.

ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே, வட அமெரிக்காவில் ஆரம்பித்து, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரை பரவி இருந்தார்கள். வருடத்தின் பெரும்பகுதி பனியில் மூடிக்கிடக்கும் கனடா, பாலைவனம் போன்ற நியூ மெக்சிகோ, மத்திய அமெரிக்க சமவெளிகள், ப்ளோரிடா மற்றும் அதனை சுற்றி இருந்த அழகிய தீவுகள், அமேசான் காடுகள் என அந்தந்த நிலபரப்பு மற்றும் சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொண்டு பல குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள்.

இன்றைய மெக்ஸிகோவின் மயன்(Mayan) இனத்தவரும், பெரு நாட்டின், இன்கா(Inca) இனத்தவரும் உன்னதமான நாகரிக வளர்ச்சி கண்டவர்கள். மத்திய அமெரிக்காவில் உள்ள பிரமீடுகளும், மயன் கோவில்களும், Machu Picchu (எந்திரன் கிளிமாஞ்சாரோ பாடல் Location) மலை நகரமும் இதற்கு சான்றுகள். உலகின் அதிகம் உற்பத்தியாகும் தானியத்தில் முதன்மையாக விளங்கும் மக்கா சோளத்தை (Corn) 7000 வருடங்களுக்கு முன்னமே காட்டுப் புற்களின் குருத்திலிருந்து படிபடியாக மேம்படுத்தி இன்றைக்கு நாம் உண்ணும் மக்கா சோளத்தினை உருவாக்கியவர்கள். உருளைகிழங்கை பல வருடங்களுக்கு பதப்படுத்தும் முறையை அறிந்து வைத்திருந்தார்கள்.

அளவற்ற இயற்கை வளம். எல்லோருக்கும் தேவைக்கு அதிகமாக எல்லாம் கிடைத்ததால், பஞ்சம் இல்லை, திருட்டு இல்லை, போலீஸ் இல்லை, நீதிபதியும் இல்லை. நிலப்பரப்பில் மட்டுமல்லாது, அவர்களின் வாழ்வியலிலும் அது ஒரு சொர்க்க பூமியாக விளங்கியது. நேர்மையின்மை என்பதே அவர்களின் அகராதியில் இல்லை என கொலம்பஸே குறிப்பிட்டுள்ளான்.

இரும்பினாலான கை, கால் விலங்கை காட்டி, இதைத்தான் எங்கள் நாட்டின் இராஜா இராணி அணிந்து கொள்வார்கள் எனக்கூறி, அவர்களின் தலைவனை நம்பவைத்து, சந்தேஷமாக அணிந்து கொள்ள சம்மதித்தவனை, விலங்கு பூட்டி சிறைப்பிடித்து கப்பலேற்றி அடிமையாக ஸ்பெயினுக்கு அனுப்பி இருக்கிறார்கள். செவ்விந்தியரின் வெள்ளேந்தித்தனத்திற்கும், ஐரோப்பியரின் நம்பிக்கை துரோகத்திற்க்கும் இதை விட ஒரு உதாரணம் இருக்கமுடியாது.

ஸ்பானியர்களை தொடர்ந்து வந்த அத்தனை ஐரோப்பியரும் இதைப்போன்ற துரோகத்தை தான் செய்து கொண்டிருந்ததால் ஸ்பானியர்கள் எனக் குறிப்பிடாமல், மொத்தமாக ஐரோப்பியர்கள் என்கிறேன். நம்நாட்டிலேயே, கோவாவை போர்ச்சுகீஸியரும், பாண்டிச்சேரியை பிரஞ்சுக்களும், மொத்த இந்தியாவை பிரிட்டிஷ் காரர்களும் பிடிக்க வில்லையா?

ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து ஐரோப்பா கொண்டுவரப்பட்டு, கருப்பினத்தவரை ஆடுமாடுகளை போல தெரு சந்தைகளில் விலை பேசும் அடிமை வியாபாரம் சர்வசாதாரணமாக நடந்து வந்த காலம் அது.

இந்தியாவிற்கு கடல் வழி கிடைக்கவில்லையென்றாலும், புதிய சொர்க்கபூமி கிடைத்திருக்கிறது. அங்கே அளவற்ற இயற்கை வளங்கள் மட்டும் இன்றி, நிறைய அடிமைகளும் கிடைப்பார்கள் எனக்கூறிய கொலம்பஸின் வாதத்தில் ஸ்பெயின் அரசுக்கு நாட்டமில்லை. காரணம் கப்பலில் ஸ்பெயினுக்கு வரும் வழியிலேயே பல செவ்விந்திய கைதிகள் இறந்து விடுவார்கள். புதிய உலகில் மூலம் கிடைக்கும் அத்துனை வருமானத்திலும் பத்து சதவீதம் மட்டும் தனக்கென்றும், மீதமுள்ள 90 சதவீதம் அரசுக்கு எனவும் கொலம்பஸின் ஆசை வார்த்தை பலிக்க ஆரம்பித்தது. தங்கள் இராஜியத்தின் எல்லைகளை அதிகப்படுத்தவும், பூலோக சொர்கத்தின் வளங்களை கொள்ளையடிக்கவும் எண்ணி, இரண்டாம் பயண திட்டத்தை ஒருவழியாக ஏற்றுக் கொண்டது ஸ்பெயின் அரசு. இம்முறையும் பயண செலவுகளுக்காக தங்கள் நாட்டின் ஜூஸ் (Jews) மதத்தவரின் சொத்துகளை அபகரித்தது.

கொலம்பஸ் சொன்னபடி ஒப்பந்தம் தயார் ஆனது, ஒப்பந்தத்தில் செவ்விந்தியரை கிருத்துவர்களாக மாற்றுவது என்பது ஒரு சரத்து மட்டுமே, மற்றபடி முழு ஒப்பந்ததில் பாதிக்கு மேல் கிடைக்கப்போகும் தங்கத்தை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதைப் பற்றித்தான் எழுதப்பட்டிருந்தது.

இம்முறை மூன்று படகுகள் இல்லை, 17 கப்பல்கள், 1200க்கும் மேற்பட்ட படை வீரர்கள், முக்கியமாக குதிரை மீதிருந்து, ஈட்டியால் தாக்கி அழிக்கும் பயிற்சி பெற்றவர்கள், மதம் மாற்ற 6 பாதிரியார்கள், எண்ணற்ற மனித மாமிசம் தின்னும் வேட்டை நாய்கள். அந்த கூட்டத்தில் ஒரே ஒரு பெண்கூட இல்லை. பின்னாளில் அத்தீவுகளில் செவ்விந்திய பெண்களிடம் அறங்கேறிய பாலியல் வெறியாட்டத்திற்கு கொலம்பஸின் இம்மாதிரியான கொள்கைதான் முழு முதற்க் காரணம்.

வேட்டையாட மர அம்புகளை வைத்திருக்கும்; புதியவர்களை அன்போடு உபசரிக்கும் அப்பாவிகளிடம் 'தங்கம் எங்கே?' எனக்கேட்கத்தான் மேலே சொன்ன இந்தனை படைகளும்.

இம்முறை வேறு தீவில் இறங்கிய அந்த கூட்டம், கண்ணில் பட்டவர்களை பிடித்து கைதியாக்கி கப்பலுக்குள் ஏற்றினார்கள். சுதந்திரமாக சுற்றித்திரிந்தவர்களை கைது செய்து, 'இனி நீங்கள் அடிமைகள், எங்கள் சொல்படித்தான் கேட்க வேண்டும்' என்ற ஐரோப்பியர்களின் கட்டளை அவர்களுக்கு விளங்கவில்லை. பிடிபட்டவர்களுக்கு அவர்கள் அடிமைகள் என்பதை உணர்துவதே ஐரோப்பியருக்கு கடினமான வேலையாக இருந்தது. ஆப்பிரிக்க அடிமை வியாபாரத்தில் முன் அனுபவம் கொண்ட கொலம்பஸுக்கே இது சவாலாக இருந்தது. கைதிகள் மிக மிக முரண்டு பிடித்தார்கள்.

இந்த பிரச்சனையை சமாளிக்க தனி ஆளாக பிடிக்காமல் அவர்களை குடும்பத்தோடு அடிமைகளாக பிடிக்க ஆரம்பித்தார்கள். இந்த அணுகுமுறை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தது. அடிமைகளும் நிறைய பேர் தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். முதல் நாளே 6 பேரை பிடித்து கப்பலுக்கு அடிமைகளாக கொண்டுவந்தவர்கள், அவர்களை தேடி வந்த 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளையும் பிடித்து கைது செய்து கப்பலில் ஏற்றினார்கள். கப்பலையே பார்த்திராத அவர்கள், வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு வந்தவர்களையும் கப்பலை சுற்றிக்காட்டுவதாக கூறி கைதியாக்கினார்கள்.

கைதியாக பிடிக்கும் போது, வாளால் குத்து பட்டு குடல் வெளியே தொங்கிக் கொண்டிருந்த ஒருவனை எப்படியும் பிழைக்க வைக்க முடியாது என உணர்ந்து, கடலில் தூக்கி போட்டு விட்டார்கள். அவன் ஒரு கையால் குடலை பிடித்துக்கொண்டு, மறுகையால் நீந்தி கொண்டு கரை சேர, அவன் தப்பித்தால் இவர்களின் உண்மை தெரிந்து விடும் என எண்ணி அவனை மீண்டும் கப்பலுக்கு பிடித்து வந்து கை கால்களை கட்டி, இம்முறை கப்பலின் மேல்தளத்திலிருந்து கடலில் தூக்கி போட, அந்நிலையிலும் அவன் தத்தளித்து கரை நோக்கி நீந்த, வெறுத்து போன படை வீரர்கள் நீந்திக்கொண்டிருந்தவனை கப்பலில் இருந்த படியே சுட்டுக் கொன்ற பின் தான் நிம்மதியடைந்தார்கள்
தொடரும்...