Wednesday, July 29, 2009

அரசு ஆரம்பப்பள்ளி, அப்பாவு நகர், தருமபுரி


ஒன்னிலிருந்து மூனாவது வரைக்கும் சேலம் நாலுரோடு பக்கம் இருக்கும் லிட்டில் ப்ஃளவர் பள்ளி. ஏதோ கடமைக்காக போனதுனால, சுவாரசியமா ஏதும் சொல்லிக்கிற மாதிரி ஞாபகமில்லை.

அப்பா வேலை காரணமா நாலவதிலிருந்து தருமபுரி தான். அரசு ஆரம்பப்பள்ளி, அப்பாவு நகர், தருமபுரி.

சந்திரா டீச்சர் தான் எங்க கிளாஸ் டீச்சர். ரொம்ப நல்ல டைப். பசங்கலை எப்பவும் அடிக்க மாட்டாங்க.

பாலமுருகன், மணி, வாசு இவிஙக தான் என் தோஸ்த். எங்களுக்குள்ள சின்ன சின்ன சண்டை வந்தாலும், எப்படியோ உடனே சேந்துக்குவோம்.

எங்களுக்கு ரொம்ப பிடிச்ச பீரியட், ரெண்டாவது பீரியட் தான். காரணம், அதுக்கப்புறம் தான் 10 நிமிஷம் இன்டர்வல் வரும், எதையாவது வாங்கி திங்கலாம்.

யார் எது வாங்கினாலும், எல்லோரும் பங்கு போட்டுக்குவோம். எனக்கு வீட்டுல கை காசு(பாக்கெட் மணி) அவ்வள‌‌வா தேறாது. பரிச்ட்சையில காட்றேன்னு சொல்லி ஏமாத்தி வாங்கி தின்னுக்கிட்டிருந்தேன். அவிங்கலும் அத பெரிசா எடுத்துக்கலை.

தேன் மிட்டாய், கல்கோனா, கம்மர் கட்டு, ஜவ்வு மிட்டாய், இலந்த வடை, அவிச்ச கிழங்கு இதெல்லாம் எங்க பேவரிட் ஐட்டம்.

யார்கிட்டயும் காசில்லன்னா... அன்னிக்கு ஸ்கூல் முன்னாடி இருக்கும் பெரிய அரச மரத்திலிருந்து, கிழே விழுந்த அத்திப்ப‌ழத்தை பொறுக்கி எடுத்துக்குவோம்.

மரத்துக்கிழே சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும், கோவில்ன்னா பெரிய கோவில் எல்லாம் கிடையாது. சின்ன பிள்ளையார் சிலை. முன்னாடி ரெண்டு கருங்கல்லு பலகை அவ்வளவு தான்.

அந்த கருங்கல் பலகை மேல ஏறி உட்கார்ந்துக்கிட்டு அந்த பழங்களை ஊதி ஊதி திம்போம். அத்தி பழத்தில சமயத்துல சின்ன பூச்சி இருக்கும் அதை ஊதி திங்கறதே ஒரு தனி க‌லை.

எப்பவாச்சும் கைல காசு கொஞ்சம் அதிகமிருந்தால், குச்சி ஐஸ் தான். சைக்கிள் கேரியரில பெரிய மரப் பொட்டி, அது தான் மொத்த கடையே, சரியா இன்டர்வல் நேரத்துல சைக்கிள் ஸ்கூலுக்கு வந்துரும், இன்டர்வல் முடிஞ்சதும், ஊர் சுத்த போயிடும்.

ஆரஞ்சு ஐஸ், பால் ஐஸ், கப் ஐஸ், சேமியா ஐஸ் ன்னு, பல ரகம். ரவுண்டா, செவ்வகமா, பல கலருல இருக்கும், சில சமயம், ஒரே ஐஸ்ல ரெண்டு மூனு கலர் கூட இருக்கும்.

அன்னிக்கு ஐஸ்ன்னு முடிவாகி, வாங்க கூட்டத்தில நின்னோம், முதல்ல ஐஸ் வாங்கின பையன் வாயில வைச்சதும், "என்ணண்னெ, ஐஸ் ஒரே உப்பு கரிக்குது" ன்னான்.

டென்சன் ஆன ஐஸ்காரர், "தே, ஐஸ் எங்கியாச்சும், உப்பு கரிக்குமா?" ன்னு சொல்லி, பெட்டிக்குள்ள கையை விட்டார். ஒரு ஐஸை எடுத்து நக்கி பார்த்து விட்டு, "சக்கரை மாதிரி இருக்கு, உப்பு கரிக்குதாம் உப்பு" உள்ளே போட்டார். வியாபாரம் தொடர்ந்தது.

அன்னியோடு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்போதும், குச்சி ஐஸ் சைக்கிளை பார்க்கும் போதும் இது தான் ஞாபகத்திற்க்கு வரும்.

Thursday, July 23, 2009

சே, இப்படியும் மனிதர்களா...


2004. ஆறு வருட அமெரிக்க வாழ்க்கை முடித்து, இந்தியா திரும்பி இருந்தேன்.

2 மாத ஓய்விற்க்கு பிறகு, பெங்களூருவில் ஒரு பெரிய MNC கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னோடு ஒரே நாளில், வேலைக்கு சேர்ந்த நண்பர் லோகேஷின் முதல் அறிமுகம் அப்போது தான். தமிழ் என்பதால் உடனே ஒட்டிக் கொண்டோம், இருவரும் வீடு தேடிக் கொண்டிருந்ததால் மேலும் நெருக்கம் அதிகம் ஆனது, இருவரும் சேர்த்து இருப்போம் என முடிவாகி, கோரமண்டலா, டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீடு பிடித்தோம்.

அன்று இரவு வீட்டு ஓனருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்க்காக இருவரும், ஒன்றாக ஆபிஸிலிருந்து கிளம்பி ஆட்டோ பிடித்தோம்.

வழியில், ATM-ல் நிறுத்தி 20 ஆயிரம் எடுத்துக்கொண்டேன். பெரிய தொகையாக இருந்ததால், அதை என் பர்ஸ்(Wallet) - ல் வைக்க முடியவில்லை. ஆனால் எப்படியோ, கஷ்டபட்டு திணித்து பேண்ட் முன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஆட்டோவில் தொடர்ந்தோம், நம்ம ஊர் சாலையும், ஆட்டோவும் சேர்ந்தால் கேட்கத்தேவையில்லை, நன்றாக குழுங்கி குழுங்கி சென்றது.

வீடு சேர்ந்ததும், ஆட்டோவிற்க்கு காசு கொடுக்க பையில் கை வைத்தேன், பகீர் என்றது. பர்ஸ் காணவில்லை. எனக்கு பெரிய ஷாக், அட்வான்ஸ் பணத்தைவிட அதி முக்கியமான பொருட்கள் அதில் உள்ளது. இரு ATM கார்ட்ஸ், ஒரு க்ரிடிட் கார்ட், எல்லாம் அமெரிக்க வங்கியினுடயது. டாலரில் தேய்க்கலாம், மதிப்பு பல லட்சங்கள். மேலும், ஒரு நியூஜெர்ஸி மாநில ட்ரைவிங் லைஸ்சென்ஸ்.

ஒரு வருடம்(H1B பிரச்சனையால்), கழித்து மீண்டும் அங்கு செல்லலாம் என இருந்ததால், வங்கி கணக்குகளை மூடாமல் இருந்தேன், வேறு இந்திய வங்கி கணக்கு ஏதும் இல்லையாதலால், இவையனைத்தையும் கையில் வைத்திருக்க வேண்டி இருந்தது.

ATMக்கும் வீட்டிற்க்கும், ஒரு கிலோ மீட்டருக்குள் தான் இருக்கும், லோகேஷ் ஆட்டோவிற்க்கு பணம் கட் செய்து விட்டு வர, இருவரும், வந்த வழியே தேடிக்கொண்டே ஒடினோம், நன்றாக இருட்ட ஆரம்பித்திருத்தது. மீண்டும், வீட்டு ஓனரிடம், டார்ஃச் வாங்கி வந்து தேடினோம், உகூம், ஒரு பலனுமில்லை. கவனக்குறைவாக இருந்தது என் தவறு தான் என்றாலும், அதற்கு தண்டனை கொஞ்சம், பெரியதாகவே இருந்தது.

"போய் போலீஸ்ல கம்ளையண்ட் குடுத்துட்டு வாங்க, ஒரு வேளை கிடைக்கலாம்" - வீட்டு ஓனர்.

மனம் சிந்திக்க மாட்டேன் என்றது, வீட்டு ஓனரே அவர் மகனை பைக் எடுத்துக் கொண்டு துணைக்கு போய் வரச் சொல்லி அனுப்பினார்.

போலீஸ் ஸ்டேசன் போனோம். எழுத்தரா, இன்ஸ்பெக்டரா என்று தெரியாது, எல்லாவற்றையும் நிதானமாக கேட்டவர்,

"இப்ப எங்களை என்ன பண்ண சொல்றீங்க? இதெல்லாம் கிடைக்காது தம்பி, எங்களுக்கு நிறைய வேலையிருக்கு" ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கலந்து கலந்து பேசினார். எனக்கும் மொழி புரியும், பேசத்தான் தெரியாது.

ஓனர் மகன் அவரிடம் கன்னடத்தில் பேசினார், "சார்... கிரெடிட் கார்டு யாராவது யூஸ் பண்ணிட்டா, கார்டு கம்பெனியில பேச கம்ளையன்ட் வேனும்"

"சரி... சரி... இதுல கம்ளையன்ட் எழுதி குடுங்க" ஒரு வெற்றுத்தாளை நீட்டினார். எழுதிக்கொடுத்தேன். வாங்கி பார்த்தவர், "உங்க செல் நம்பரையும், எழுதுங்க" என்றார்.

நான் அப்போது செல் க‌னெக்ஷன் வாங்கவில்லையாதலால், லோகேஷ் நம்பரை கொடுத்தேன். என் முன், வாக்கி டாக்கி ஆன் செய்து ரோந்தில் உள்ள ஒரிரு காவலர்களிடம் பேசி, பர்ஸ் கிடைத்தால் ஸ்டேசன் வருமாறு கூறினார்.

நான் நன்றி சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானேன். என்னை நிறுத்திய அவர், "சார் ஏதாவது குடுத்துட்டு போங்க" என்றார்.

"ஏதாவதுன்னா?"

"கம்ளையண்ட் வாங்கி இருக்கோம்ல்ல, பர்ஸ் கிடைச்சா கூப்பிடறேன், ஒரு 100 ரூபா குடுத்துட்டு போங்க"

"சார் மொத்தமா தொலைச்சுட்டு நிக்கிறேன், இப்ப எப்படி?"

"உங்க ப்ரண்ட்ஸ் யாராச்சும் இருந்தா, அவிங்ககிட்ட வாங்கி குடுங்க"

"சே... இப்படியும் மனிதர்களா..."

என்று எனக்குள் நொந்து கொண்டேன்.

"பர்ஸ் கிடைச்சா தர்றேன்" னு சொல்லி நகர்ந்தேன்.

நேராக ப்ரவுஸிங் சென்டர் சென்று, என் அமெரிக்க வங்கி கணக்கில் நுழைந்து, கார்ட் கஸ்டமர் சர்விஸ் நம்பர் தேடி பிடித்து, போன் செய்ய ரெடியானேன்.

"சங்கர்... சங்கர்.... கிடைச்சுடிச்சு" லோகேஷ் கத்திக்கொண்டு ஓனர் மகனுடன் பைக்கில் வந்திறங்கினான்.

"வாவ்... ஸுப்பர்!!! எப்படி?" ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

"யாரோ ஒருத்தர் என் மொபைல்ல கால் பண்ணி சொன்னார், அவர் வீட்டு வாசலில் கிடைச்சதாம், என் நம்பர் சுனில் கொடுத்திருக்கான்"

"சுனில் நம்பரு?"

"உங்க பர்ஸ்ல இருந்திருக்கு..." எங்களோடு ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்த இன்னொரு நண்பர் சுனில்.

"உங்களை நேர்ல வரச்சொல்லி அவிங்க அட்ரஸ் குடுத்திருக்காங்க.... வாங்க போவோம்" ‍லோகேஷ்.

போனோம்.

"வாங்க, வாங்க... உங்க டென்சன் புரியுது..., உள்ள வந்து உட்காருங்க..." ஒரு பெரியவர்.

"இல்லை பரவால‌"

"அடடே... ஒன்னும் கூச்ச படவேனாம், உள்ள வந்து உட்கார்ந்தாதான் உங்க பர்ஸ் கிடைக்கும்." பெரியவரின் மனைவி.

உட்கார்ந்தோம்.

"காபியா..டீயா?" பெரியவரின் மனைவி.

"பரவாலை, அதெல்லாம் ஒன்னும்..."

"சரி காபியே போடறேன், இந்த பிஸ்கட் சாப்பிட்டுக்கிட்டு இருங்க" உள்ளெ சென்று விட்டார்.

அந்த பெரியவர் எங்களிடம் பேச்சு கொடுத்தார். "எங்க சின்ன பையன் வீட்டுக்குள்ள நுழையும் போது அவனுக்கு கிடைச்சுருக்கு. அவன் தான் பர்ஸ இருந்த பேப்பர்ல கிடைச்ச நெம்பரெல்லாம் ட்ரை பண்ணி உங்களை பிடிச்சான்"

ஷோபாவின் நுனியில் நெளிந்துக் கொண்டு இருந்தேன்.

"பிஸ்கட் அப்படியெ இருக்கு, எடுத்துகங்க தம்பி"

ஒரு பிஸ்கட் உருவினோம். காப்பி வந்தது.

"சாமி படம் முன் வச்சிருக்கு, வரேன்" காப்பியை டேபிளில் வைத்து விட்டு ம‌றுப‌டியும் உள்ளெ போனார்.

அவர்களுடைய மகன் வந்து எதிரே அமர்ந்து, பயோகாண் - இல் வேலை செய்வதாகவும், என் அமெரிக்க வாழ்க்கை எப்படி என்றும், ஏன் வந்துட்டீங்க என்றும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

"சரியா இருக்கா பார்த்துக்கோங்க" அந்த அம்மா பர்ஸை என்னிடம் கொடுத்தார்.

நான் பர்ஸை திறந்து உள்ளெ இருந்த மொத்த பணத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்தேன், "இது உங்களுடையது, மறுக்காம எடுத்துக்குனும்"

பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது, "எங்களை இழிவு படுத்தாதீங்க" என்ன பேசியும் அந்த பெரியவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை. நன்றி சொல்லிவிட்டு திரும்பும் போது,

"சே... இப்படியும் மனிதர்களா..."

என்று எனக்குள் நெகிழ்ந்து விட்டேன்.

பின்குறிப்பு 1: லோகேஷ் நெம்பரில் போன் செய்து அவன் மூலமாக, பர்ஸ் கிடைத்த மேட்டர் தெரிந்து கொண்ட போலீஸ்காரர், இரு நாட்களாக எங்களை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.

பின்குறிப்பு 2: அந்த பெரியவரை சமாதானப்படுத்தி, ஒரு சின்ன மீன் தொட்டி பரிசு கொடுத்து, மீண்டும் ஒரு முறை காபி குடித்து விட்டு வந்தோம்.

Tuesday, July 21, 2009

ப்ளாக் புட்டுக்கும், பேக்கப் ஃபைலும் வைரஸ் வந்து காலி ஆகும்


இந்த கடிதம் வந்து 5 நாட்களுக்குள், இதே மாதிரி இன்னும் 50 பேருக்கு நீங்களும் கடிதம் எழுத வேண்டும், அப்படி செய்த பலருக்கு அடுதத 30 நாளில், ஒரு தங்க புதையல் கிடைத்தது, மகளுக்கு திருமணம் ஆனது. பதவி உயர்வு கிடைத்தது. இதை உதாசினப் படுத்தியவருக்கு, அடுத்த 10 நாளில், ஆக்ஸிடெண்ட் ஆகி கால் போனது. வீடு ஜப்திக்கு வந்தது, அவர் மனைவிக்கும் தீராத வியாதி வந்தது.
இப்படிக்கு,

.......துனை.

உங்களில் பலர் இதை மாதிரி கடிதம் பார்த்திருக்கலாம், அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்.

இதை போன்ற கடிதம், நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டிற்க்கும் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்? என்று இதை பற்றி என் பெற்றோர் பேசிக்கொண்டதும் ஞபாகம் இருக்கிறது. என்ன செய்தார்கள் என்று தெரியாது.

நிற்க.

நானோ ப்ளாகிற்க்கு புதிது, என் தினவை தீர்த்துக்கொள்ள ப்ளாக் - யை ஆரம்பித்துவிட்டேன். அவ்வப்போது, மற்றவர் பதிவை படிப்பேன், ஆனால், பின்னூட்டம் இட மாட்டேன். அதுவும், என் பதிவில் பின்னூட்டம் எழுதியவருக்கு கூட பதில் பின்னூட்டம் இடுவதில்லை. இடக்கூடாது என்று ஆனவம் ஏதும் இல்லை, ஏனோ தோன்றியதில்லை.

சென்ற வாரம், சங்கா அவர்களிடமிருந்து ஒரு பின்னூட்டம் வந்து இருந்தது. 'உங்களை “Interesting Blog" விருதுல கோர்த்து விட்டிருக்கிறேன், பிடித்திருந்தால் தொடருங்கள்!' - என்று.

சஙகாவிற்க்கு நன்றி சொல்லிவிட்டு, விருதா? அது என்ன? எது? என்று தெரிந்து கொள்ளலாம் என்று புறப்பட்டேன். அலுவலக வேலை ஒரு பக்கம், நான் இப்போது சீரியஸாக செய்து கொண்டு இருக்கும் ஸ்டாக் மார்கெட் ஒரு பக்கம், ப்ளாக்(Blog) ஒரு பக்கம் ('எப்பவும் இந்த லேப்டாப கட்டிக்கிட்டு அழுவுங்க' பொண்டாட்டி சொல்வதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுகின்றேன்.) ஒரு வாரமாக பலரின் பதிவுகளை மேய்ந்து திரிந்தேன். பல உண்மை புலப்பட்டது. மேலே உள்ள கடிதம் எனது கற்பனையில் வேறு மாதிரி தோன்றியது.

இதே மாதிரி இன்னும் 6 பேருக்கு நீங்களும் கொடுக்க வேண்டும், அப்படி செய்த பலருக்கு அடுதத 30 நாளில், பல ஃபாளோயர்ஸ்(Followers ) சேர்ந்தார்கள். ஒவ்வொரு பதிவும், யுத்ஃபுல் விகடனில் வரும், எல்லா பதிவும் நிறைய ஒட்டுக்கள் பெறும். இதை உதாசினப் படுத்தியவருக்கு, அடுத்த 10 நாளில், ப்ளாக் புட்டுக்கும், பேக்கப் ஃபைலும், வைரஸ் வந்து காலி ஆகும்.

இப்படிக்கு,

.......துனை.

சரி மொக்கை போதும், சீரியஸ்ஸாக விஷயத்திற்க்கு வருவோம்.

'பலரின் பதிவுகளை மேய்ந்து திரிந்தேன்' என்று சொன்னேன் அல்லவா? அதில் புலப்பட்டது, தன்னுடைய திருப்திக்காக எழுதுவதாக பலர் சொன்னலும், கீழே உள்ள சில சின்ன விஷயங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. (என்னையும் சேர்த்துத்தான்)

1. தன்னுடைய பதிவிற்க்கு பின்னுட்டம் நிறைய வருவது,

2. தன்னுடைய ப்ளாக் - க்கு நிறைய ஃபாலோயார்ஸ் சேருவது.

3. ஓட்டுப்பதிவில் தன்னுடைய பதிவிற்க்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பது.

4. தன்னுடைய ப்ளாக் - க்கு நிறைய ஹிட்டுக்கள் கிடைப்பது.

5. எல்லாவற்றிக்கும் மேலாக 'பட்டாம்பூச்சி', 'சுவாரசியமான ப்ளாக்' போன்ற சின்ன சின்ன விஷயங்கள்.

இதெல்லாம் பொய் என்றால், ஃபாலோயார்ஸ் எதற்கு? ஹிட் கௌண்டர்கள் எதற்கு? ஓட்டுக்கள் எதற்கு? பின்னுட்டமும் அதற்கு பதிலும் எதற்கு?

ஒருவரோ , 'பட்டாம்பூச்சி', 'சுவாரசியமான ப்ளாக்' இருமுறை வாங்கினேன் என பெருமை கொள்கிறார், இன்னொருவரோ, இதில் ஒன்றுமில்லை என சங்கிலியை துண்டிக்கிறார். இது அவரவர் விருப்பம்.

''என்னடா சொல்ல வர வென்ரு?' என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. ஆதலால்...

முகம் தெரியாத ஒருவர், அவருக்கு பின்னூட்டம் இடாமல், ஃபாலோயாராக சேராமல், இதை அளிக்கிறார் என்றால், என் பதிவில் உள்ள ஏதோ ஒரு விஷயம் அவரை கவர்ந்திருக்கிறது என்று தானே பொருள்? ஸோ, சங்கா என்னை சந்தோஷ படுத்திய மாதிரி, இன்னும் 6 பேரை சந்தோஷ படுத்தலாம்(சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷ படுத்தறது தான் - யாரு முதல்ல சொன்னங்களோ தெரியாது, நான் முதல்ல கேட்டது, பாக்யாவில் பாக்யாராஜ் சொன்னப்பத்தான்) என எண்ணி, என்னை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்த, கீழே உள்ளர்களுக்கு, 'Interesting Blog' விருது போய் சேருகிறது.

சங்கிலியை தொடர்வதும், அறுப்பதும் அவரவர் விருப்பம்.

சூர்யாவின் வண்ணத்துபூச்சியார்,

என்.கணேசனின் என்.கணேசன்,

சுரேஷின் சக்கரை,

தம்பி பிரபாகரின் வாழ்க்கை வாழ்வதற்கே...,

வடகரை வேலனின் வடகரை வேலன்,

நாகாவின் ஒரு ஊரில்....

பின்குறிப்பு: இப்போதெல்லாம் முடிந்த வரை படிப்பதற்க்கு நல்ல பிள்ளையாக பின்னுட்டமோ பதில் பின்னுட்டமோ இடுவது என்று முடிவு செய்துள்ளேன். ஹூம்,,, பார்ப்போம்.

Sunday, July 19, 2009

அமெரிக்க உழவர் சந்தை

போட்டோவில் ராம் என்கிற 'ஷக்கி மாமா' உழவர் சந்தையில்.

முதலில் என் புகைபடங்களை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு மிக்க நன்றி, நன்றி, நன்றி. இனி இதன் கதை.

நண்பர் ராம் லஞ்ச் பாக்ஸை திறந்ததும், பருப்பு கீரை நறுமணம் தூக்கியது.

"ராம் வாசனை பட்டைய கிளப்புது... என்ன கீரை?"

"மனதக்காளி கீரை..."

"ரியலி? 2 வருஷம் ஆச்சு, லாஸ்ட் இந்தியா ட்ரிப்-ல சாப்பிட்டது. எங்க வாங்கினது, பூஜாலயா(இந்தியன் ஸ்டோர்)?"

"நீங்க வேற, இது ஃபார்மர்ஸ் மார்கெட்-ல வாங்கினது."

"ஃபார்மர்ஸ் மார்கெட்-லயா? அந்த ஸ்டோர் எங்க இருக்கு?"

"அது ஸ்டோர் இல்ல, உழவர் சந்தை மாதிரி, நம்ம கம்யூனிடி சென்டர் பார்க்கிங் லாட்-ல எவ்ரி தர்ஸ் டே போடறாங்க, ஒரு பெரிய கீரை கட்டு ஒரு டாலர் தான், அதுவும் ரொம்ப பிரஸ்ஸா இருக்கு. கீரை மட்டுமில்லை, இன்னும் நிறைய ஐட்டம்ஸ் இருக்கு, வேன்னா... நெக்ஸ்ட் வீக் நாம சேந்து போவோம்"

அடுத்த வியாழக்கிழமை. மதியம் 3 மணி. ஆத்துக்காரம்மகிட்ட(அட,WIFE தாங்க) இருந்து போன்.

"நானும் சுஜாதாவும், ஃபார்மர்ஸ் மார்கெட் போயிட்டு வந்திடறோம்"

"சரி சரி, அப்ப பாப்பா...?"

"அவ தூங்கறா... எழ்றதுக்குள்ள வந்துருவோம், அப்படியே எழுந்தா... உங்க அம்மா பார்த்துக்குவாங்க"

அப்பாடா ஒரு வேலை மிச்சம். அடுத்த 10 நிமிடத்துல மீண்டும் போன், மறுபடியும், வைஃப்க்கிட்ட இருந்து தான். "ஏங்க.. பாப்பா எழுந்து அழறா... நீங்களே போயிட்டு வந்திருங்க."

நானும் ராமும், 4 மணிக்கெல்லாம், ஆரம்பித்தோம். போகும் போது பேச்சு, என் புது ப்ளாக் பற்றி அடிபட்டது.

"நெக்ட், இந்த உழவர் சந்தை பற்றி எழுதுங்களேன்..."

"ஸூப்பர் ஐடியா... பட்டைய கிளப்பிடுவோம்... சே, கேமரா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்."

"அதான் உங்க ஐபோன்(iPhone) இருக்குள்ள..."

"ஆமா இல்ல... மறுபடியும், நல்ல ஐடியா குடுத்தீங்க... இதுக்காகவே உங்க படம் போட்டு உங்களை பேமஸ் ஆக்கிடறேன்."

"ஐய்யயோ அதெல்லாம் வேனாம், அப்புறம் இந்தியா போனா ஏர்போர்ட்ல இருந்தே ரசிகர் தொல்லை ஆரம்பிச்சுடும்...ஸோ... தினமலர் அந்து மணி, லென்ஸ் மாமா மாதிரிஎன் தலையை ப்ளாக் பண்ணிருங்க..."

"அவ்வளவு கஷ்டம் எதுக்கு, உங்க போட்டோவை அப்படியே போட்டு, இது தான் 'ஷக்கி மாமா'ந்னு எழுதிடறேன். (எங்கள் குருப் ஜூனியர் எல்லாம், ராமை 'ஷக்கி ஷக்கி' நு சொல்லி தான் விளையாடும். காரணம், குழந்தைகள் பர்த்டே கொண்டாடும் ஒரு இடம் Chuck'e Cheese. அங்கு Chuck என்று ஒரு கேரக்டர் உண்டு. ராம் அடிக்கடி குழந்தைகளிடம் நான் தான் Chuck'e என்று சொல்லி விளையாடுவார்).

ப்ளாகில் சும்மா போட்டோ போடுவதற்க்கு பதிலா விகடனுக்கு அனுப்பினால் என்ன என்று தோனியது. இந்த போட்டோக்களுக்கான விகடன் லின்ங் அமெரிக்க உழவர் சந்தை

பின் குறிப்பு: இந்த ப்ளாகை படிப்பவர்கள், நண்பர் ராமுக்கு ரசிகர் மன்றம் ஆரம்ப்பித்து, அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்று தயவு செய்துக் கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, July 16, 2009

தேக்கடி போட்டிங் டிக்கெட்



காலேஜ் டூர். கொடைகானல் போலாம்ன்னு முடிவாச்சி. மொத்த பஸ்ஸுக்கு ஆள் சேராததினால, தனியா டூர் பஸ் புக் பண்ணலை. அதுவுமில்லாம, எந்த வாத்தியும் கூட வரலை.

சரி, ரெகுலர் பஸ்லயே டிக்கெட் வாங்கி ஒரு குருப்பா போய்வரலாம்ன்னு முடிவாச்சு.

கடைசி நாளு, என்னாச்சுன்னு தெரியலை, க்ளாஸ் ரெப் சுந்தரேசன் என்கிட்ட வந்து, வசூல் பணத்தை தினிச்சு, "என்னால வர முடியலை, எல்லோரும் ஒழுங்கா போய்ட்டு வாங்க, எல்லா பணத்துக்கும், ஒழுங்கா கணக்கு வைச்சுக்கோ"ன்னான்.

இத பாத்த PVP-க்கு அப்பவே பகீர்ன்னுச்சு, "என்னாடா இந்த குடிகாரா கும்பலுக்கிட்ட இப்படி மொத்த பணத்தையும் தூக்கி குடுத்துட்டானே" ன்னு ஒரே யோசனை. நானும் அவனும், ஒரெ ஊருக்காரனா போனதால, என்கிட்ட ஒன்னும் சொல்லவும் முடியலை, மெள்ளவும் முடியலை.

எல்லோரும் தாம்பரம் பஸ்ஸாடான்ட்ல ஆஜர். பஸ்ஸுக்கு இன்னும் 2 மணி நேரம் இருந்ததால, நானும் என் கேங்கும் அப்படியே ஒரு பார் பக்கமா ஒதுங்க ப்ளான் போட்டோம்.

எப்படியோ இது PVP தெரிந்சு, நானும் வாரேன்னு, எங்க கூடவே திரிஞ்சான். ஒரு வழியா அவனை கழட்டி விட்டுட்டு, ஆளுக்கு ஒரு பீர் உள்ள தள்ளிக்கிட்டு , ஒரு ஃப்ள்(FULL) ஸ்டாக் பண்ணிக்கிட்டு வந்தோம்.

"வசூல் பணத்தை ஆரம்பத்திலேயே இப்பிடி பண்றீஙகளேடா..." பொறுக்காம கேட்டுட்டான்.

சொந்த பணத்துல குடிச்சாலும், இவனுக்கு வேற பதில் சொல்லவேண்டி இருக்கேன்னு... எனக்கு ஒரெ டென்ஷன், "ஆமாம், கடைசியில கணக்கு காட்டும் போது சரியில்லைன்னா கேளு".

கொடைகானல் போய் சேர்ந்தோம்.

ஒரு ஹோட்டலல சாப்பிட போனா போதும்..., ஒரு பொட்டி கடையில தம் வாங்க போனா போதும்... , எப்பவவும், PVP பின்னால நிப்பான். சொன்னா நம்ப மாட்டீங்க டூர் முடியிற வரை நிழல் மாதிரி இருந்தான்.

கொடை முடிச்சு, திரும்ப போறதா ப்ளேன்... வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.

திரும்ப போனாலும், கைல கொஞ்சம், வசூல் பணம் மீதி இருக்கும்ன்னு சொன்னேன். யாரோ இப்பிடியே, தேக்கடி போய் வந்துரலாம்ன்னு ஐடியா சொன்னாங்க. அது எல்லாருக்கும் புடிச்சி போச்சி.

ஆனா, அதுக்கு பணம் பத்தாது, அதனால, தலைக்கு எவ்வளவுன்னு முடிவு பண்ணி எல்லார்க்கிட்டயும் வசூல் பண்ண ஆரம்பிச்சோம், PVP-யும் அழுதுக்கிடே குடுத்தான்.

ஒரு வழியா டூர் முடிஞ்சு, கணக்கு பார்த்தா... கொஞ்சம் இடிக்குது. எல்லாம் ஒழுங்கா எழுதி வைச்சும் கடைசியா இப்பிடி ஆச்சேன்னு ஒரெ வருத்தம். என்ன யோசனை பண்ணியும் கணக்கு வரலை, PVP சும்மா விட மாட்டானேன்னு ஒரு பக்கம் பயம் வேற.

கடைசியா அவனே, உதவிக்கு வந்தான், கணக்கு சீட்டை வாங்கி பார்த்தான், "தேக்கடி போட்டிங் டிக்கேட் மிஸ் பண்ணியிருக்க பாரு"

அதை போட்டதும், உடனே, கணக்கு டேலி ஆச்சு.

கொடைக்கானல்ல ப்ரண்ட் சுகுமார் அடிச்ச கூத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.

Monday, July 13, 2009

ஏய், கொத்து பரோட்டாவும், சிக்கன் 65 - யும் எடுத்து வை.


ஒரு ஆங்கில படம்.

கதை களமும், நடக்கும் சுழழும் அவர்கள் நாட்டிலேயே (ஏதோ ஒரு வெஸ்டர்ன் கன்ட்ரி என்று வைத்துக்கொள்ளுங்கள்) நடக்கிறது.

படத்தில், தாதா வில்லன், கதாநாயகியான தன் வீட்டு வேலைக்காரியிடம், சாப்பாடு கொண்டு வா என்கிறான், எப்படி சொல்லியிருப்பான்?

1. ஏய், சேன்ட்விச்(Sandwich) போட்டு எடுத்து வை.
2. ஏய், கொத்து பரோட்டாவும், சிக்கன் 65- யும் எடுத்து வை.

உங்கள் விடை 1 என்றால், நீங்கள் ரொம்ப சரி. விடை 2 என்றால், நீங்கள் ரொம்ப பெருமை பட்டுக்கொள்ளலாம்.

நீங்களும், ஸ்லம்டாக் மில்லினர், இயக்குனர்(Danny Boyle) மாதிரியே 'அபத்தமாக' சிந்திப்பவர் என்று.

பின்னே? எந்த மும்பாய் வில்லன் சன்ட்விச் சாப்பிடுவான்? கொத்து பரோட்டா, இல்லையென்றாலும், மினிமம், ஒரு ரொட்டி, நான்(Naan) ஏதாவது ஒன்று தான் கேட்டிருப்பான், என்ன சொல்றீங்க?

இந்திய தனத்தோடு, பல அருமையான காட்சிகளை, அமைத்த இயக்குனர் எப்படி இதில் கோட்டை விட்டுட்டார்?

Saturday, July 11, 2009

டேய் கத்தாதீங்கடா....


திருச்சி. ஊரில் மிக முக்கிய குடியிருப்பு பகுதியில் அமைந்தது அந்த நகர்.

அதன் மத்தியில் வெளியே தெரியாத மாதிரி, ஒரு தியேட்டர் உண்டு. அந்த நகர் பெயரும், அந்த தியேட்டர் பெயரும், நல்ல எதுகை மேனையுடன் இருக்கும். நல்ல மலர் பெயர் கொண்ட தியேட்டர். (திருச்சி வாசிகளே, உங்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு? சரி, கடைசியா தியேட்டர் பேரை சொல்றேன்)

இந்த விஷயத்துல பெரிய ஆளு, ப்ரெண்டோட தம்பி.

தியேட்டர் பேரை சொன்னாலே போதும், அங்க பிட் போடுவானா இல்லியா... என்னைக்கு போடுவான், எவ்வளவு நேரம் போடுவான் எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பான்.

அவன் தேதி குறிச்சி சொன்ன ஒரு நாள், எல்லோரும் அந்த தியேட்டரில் ஆஜர், அவனையும் சேர்த்துத்தான்.

படம் ஆரம்பித்து, தியேட்டரில் ஒரே அமைதி.

புருஷனோ பெரிய பிஸினஸ்மேன், டைட்டாக டை(Tie) கட்டிக்கொண்டு ஆபிஸில், வேலை, வேலை...

மனைவியோ எப்போதும் தனியாக படுத்துக்கிடப்பது, ப்ரிஜில் இருந்து தண்ணீர் எடுத்து, மேலே ஊத்திக்கொண்டே குடிப்பது, ஸிம்மிங்கிள் புல்லில் குளித்துக்கொண்டே, பக்கத்து வீட்டு மொட்டை மாடியை பார்ப்பது......

பக்கத்து வீட்டு வாலிபனோ மொட்டை மாடியில் எப்போதும், எக்ஸசைஸ் செய்வது....

இப்படியே படம் ஓடிக்கொண்டு இருந்தது.

இடைவேளை.

எங்க எல்லோருக்கும் ஒரே டென்ஷன்,

"டேய்... என்னடா இது?"

"சும்மா இருங்கண்ணே... இங்க இடைவேளைக்கு அப்புறம் தான்..."

வேறு வழியில்லை, அவன் சொன்னால் சரியாத்தான் இருக்கும். தம் அடித்து முடித்து, கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தோம்.

இரண்டே நிமிடத்தில், ஒரு மூலையில் இருந்து விசில் சத்தம் வந்தது.

"டேய் சத்தம் போடாதீங்கடா..." தம்பி.

சத்தம் அப்படியே பரவி, அதிகரிக்க ஆரம்பித்தது....

"அண்ணே.. இங்க சத்தம் போட்டா, போட மாட்டேண்ணே... " தம்பி பதறினான்.

இன்னும் சில நிமிடத்தில் தியேட்டர் முழுவதும், விசில் சத்தம் பரவி, தியேட்டரே திக்குமுக்காடியது.

"ஐய்யோ... ஐய்யோ..., கத்தாதீங்கடா...போடமாட்டான்டா... டேய் கத்தாதீங்கடா..." தம்பி, கூட்டத்தைப் பார்த்து கதறினான்.

"டேய் கத்தாதீங்கடா... டேய் கத்தாதீங்கடா..."

சத்தம் ஓய்ந்தபாடில்லை, "அண்ணே... இன்னிக்கு அவ்வளவு தான்... போடமாட்டான், வாங்க போவோம்... டிக்கெட் பணம் தண்டம்..." சொல்லிக் கொண்டு நடை கட்டினான்.

நாங்கள் எல்லோரும், அவன் பின்னாடியே நடையை கட்டினோம்.

இடைவேளையில் பார்த்த நண்பரை, ஒரு வாரம், கழித்து பேசிக்கொண்டு இருந்த போது, தெரிந்தது, அன்று கடைசிவரை பிட் போடவில்லை என்று.

தம்பி எப்போதும் சரி தான்.

பின் குறிப்பு: என்னது? தியேட்டர் பேரா? உங்க திருச்சி ப்ரண்டை கேட்டு தெரிஞ்சுகுஙக.

Friday, July 10, 2009

இத்தெல்லாம் டூப்பு - கந்த சாமி காய்ச்சல் - 1


கந்த சாமி மறந்து போன ஒரு சில - இத்தெல்லாம் டூப்பு - இங்கே,

தள்ளு வண்டி, குதிர வண்டி,
சைக்கிளு, மொப்பெட்டு,
பைக்கு, புல்லெட்டு, ரிக் ஷா, ஆட்டோ,
டேக்ஸி, கால் டேக்ஸி,
ஜீப், வேன், டெம்போ,
டவுன் பஸ், பாயின்ட் டூ பாயின்ட்,
ரூட் பஸ், எக்ஸ்ப்ரஸ்,
மொபசலு, ஆம்னி பஸ்,
கார், லாரி, ட்ரக், ட்ரேக்டரு,
ரயிலு, கூட்ஸ் வண்டி, ட்ராலி,
கட்டுமரம், பாய் மரம், போட்,
பேஃர்ரி, கப்பலு, பலூனு,
ப்ளைட், ஹெலிகாப்டரு,
ராக்கெட்டு, ஜெட்டு ...டு...டு...டு

இத்தெல்லாம் டூப்பு
மாட்டு வண்டி தான் டாப்பு
இத்தெல்லாம் டூப்பு
மாட்டு வண்டி தான் டாப்பு
இத்தெல்லாம் டூப்பு
மாட்டு வண்டி தான் டாப்பு...

மூடுவந்தா டூப்பு தொடரும்...