Thursday, July 23, 2009

சே, இப்படியும் மனிதர்களா...


2004. ஆறு வருட அமெரிக்க வாழ்க்கை முடித்து, இந்தியா திரும்பி இருந்தேன்.

2 மாத ஓய்விற்க்கு பிறகு, பெங்களூருவில் ஒரு பெரிய MNC கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். என்னோடு ஒரே நாளில், வேலைக்கு சேர்ந்த நண்பர் லோகேஷின் முதல் அறிமுகம் அப்போது தான். தமிழ் என்பதால் உடனே ஒட்டிக் கொண்டோம், இருவரும் வீடு தேடிக் கொண்டிருந்ததால் மேலும் நெருக்கம் அதிகம் ஆனது, இருவரும் சேர்த்து இருப்போம் என முடிவாகி, கோரமண்டலா, டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீடு பிடித்தோம்.

அன்று இரவு வீட்டு ஓனருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்க்காக இருவரும், ஒன்றாக ஆபிஸிலிருந்து கிளம்பி ஆட்டோ பிடித்தோம்.

வழியில், ATM-ல் நிறுத்தி 20 ஆயிரம் எடுத்துக்கொண்டேன். பெரிய தொகையாக இருந்ததால், அதை என் பர்ஸ்(Wallet) - ல் வைக்க முடியவில்லை. ஆனால் எப்படியோ, கஷ்டபட்டு திணித்து பேண்ட் முன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஆட்டோவில் தொடர்ந்தோம், நம்ம ஊர் சாலையும், ஆட்டோவும் சேர்ந்தால் கேட்கத்தேவையில்லை, நன்றாக குழுங்கி குழுங்கி சென்றது.

வீடு சேர்ந்ததும், ஆட்டோவிற்க்கு காசு கொடுக்க பையில் கை வைத்தேன், பகீர் என்றது. பர்ஸ் காணவில்லை. எனக்கு பெரிய ஷாக், அட்வான்ஸ் பணத்தைவிட அதி முக்கியமான பொருட்கள் அதில் உள்ளது. இரு ATM கார்ட்ஸ், ஒரு க்ரிடிட் கார்ட், எல்லாம் அமெரிக்க வங்கியினுடயது. டாலரில் தேய்க்கலாம், மதிப்பு பல லட்சங்கள். மேலும், ஒரு நியூஜெர்ஸி மாநில ட்ரைவிங் லைஸ்சென்ஸ்.

ஒரு வருடம்(H1B பிரச்சனையால்), கழித்து மீண்டும் அங்கு செல்லலாம் என இருந்ததால், வங்கி கணக்குகளை மூடாமல் இருந்தேன், வேறு இந்திய வங்கி கணக்கு ஏதும் இல்லையாதலால், இவையனைத்தையும் கையில் வைத்திருக்க வேண்டி இருந்தது.

ATMக்கும் வீட்டிற்க்கும், ஒரு கிலோ மீட்டருக்குள் தான் இருக்கும், லோகேஷ் ஆட்டோவிற்க்கு பணம் கட் செய்து விட்டு வர, இருவரும், வந்த வழியே தேடிக்கொண்டே ஒடினோம், நன்றாக இருட்ட ஆரம்பித்திருத்தது. மீண்டும், வீட்டு ஓனரிடம், டார்ஃச் வாங்கி வந்து தேடினோம், உகூம், ஒரு பலனுமில்லை. கவனக்குறைவாக இருந்தது என் தவறு தான் என்றாலும், அதற்கு தண்டனை கொஞ்சம், பெரியதாகவே இருந்தது.

"போய் போலீஸ்ல கம்ளையண்ட் குடுத்துட்டு வாங்க, ஒரு வேளை கிடைக்கலாம்" - வீட்டு ஓனர்.

மனம் சிந்திக்க மாட்டேன் என்றது, வீட்டு ஓனரே அவர் மகனை பைக் எடுத்துக் கொண்டு துணைக்கு போய் வரச் சொல்லி அனுப்பினார்.

போலீஸ் ஸ்டேசன் போனோம். எழுத்தரா, இன்ஸ்பெக்டரா என்று தெரியாது, எல்லாவற்றையும் நிதானமாக கேட்டவர்,

"இப்ப எங்களை என்ன பண்ண சொல்றீங்க? இதெல்லாம் கிடைக்காது தம்பி, எங்களுக்கு நிறைய வேலையிருக்கு" ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கலந்து கலந்து பேசினார். எனக்கும் மொழி புரியும், பேசத்தான் தெரியாது.

ஓனர் மகன் அவரிடம் கன்னடத்தில் பேசினார், "சார்... கிரெடிட் கார்டு யாராவது யூஸ் பண்ணிட்டா, கார்டு கம்பெனியில பேச கம்ளையன்ட் வேனும்"

"சரி... சரி... இதுல கம்ளையன்ட் எழுதி குடுங்க" ஒரு வெற்றுத்தாளை நீட்டினார். எழுதிக்கொடுத்தேன். வாங்கி பார்த்தவர், "உங்க செல் நம்பரையும், எழுதுங்க" என்றார்.

நான் அப்போது செல் க‌னெக்ஷன் வாங்கவில்லையாதலால், லோகேஷ் நம்பரை கொடுத்தேன். என் முன், வாக்கி டாக்கி ஆன் செய்து ரோந்தில் உள்ள ஒரிரு காவலர்களிடம் பேசி, பர்ஸ் கிடைத்தால் ஸ்டேசன் வருமாறு கூறினார்.

நான் நன்றி சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானேன். என்னை நிறுத்திய அவர், "சார் ஏதாவது குடுத்துட்டு போங்க" என்றார்.

"ஏதாவதுன்னா?"

"கம்ளையண்ட் வாங்கி இருக்கோம்ல்ல, பர்ஸ் கிடைச்சா கூப்பிடறேன், ஒரு 100 ரூபா குடுத்துட்டு போங்க"

"சார் மொத்தமா தொலைச்சுட்டு நிக்கிறேன், இப்ப எப்படி?"

"உங்க ப்ரண்ட்ஸ் யாராச்சும் இருந்தா, அவிங்ககிட்ட வாங்கி குடுங்க"

"சே... இப்படியும் மனிதர்களா..."

என்று எனக்குள் நொந்து கொண்டேன்.

"பர்ஸ் கிடைச்சா தர்றேன்" னு சொல்லி நகர்ந்தேன்.

நேராக ப்ரவுஸிங் சென்டர் சென்று, என் அமெரிக்க வங்கி கணக்கில் நுழைந்து, கார்ட் கஸ்டமர் சர்விஸ் நம்பர் தேடி பிடித்து, போன் செய்ய ரெடியானேன்.

"சங்கர்... சங்கர்.... கிடைச்சுடிச்சு" லோகேஷ் கத்திக்கொண்டு ஓனர் மகனுடன் பைக்கில் வந்திறங்கினான்.

"வாவ்... ஸுப்பர்!!! எப்படி?" ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

"யாரோ ஒருத்தர் என் மொபைல்ல கால் பண்ணி சொன்னார், அவர் வீட்டு வாசலில் கிடைச்சதாம், என் நம்பர் சுனில் கொடுத்திருக்கான்"

"சுனில் நம்பரு?"

"உங்க பர்ஸ்ல இருந்திருக்கு..." எங்களோடு ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்த இன்னொரு நண்பர் சுனில்.

"உங்களை நேர்ல வரச்சொல்லி அவிங்க அட்ரஸ் குடுத்திருக்காங்க.... வாங்க போவோம்" ‍லோகேஷ்.

போனோம்.

"வாங்க, வாங்க... உங்க டென்சன் புரியுது..., உள்ள வந்து உட்காருங்க..." ஒரு பெரியவர்.

"இல்லை பரவால‌"

"அடடே... ஒன்னும் கூச்ச படவேனாம், உள்ள வந்து உட்கார்ந்தாதான் உங்க பர்ஸ் கிடைக்கும்." பெரியவரின் மனைவி.

உட்கார்ந்தோம்.

"காபியா..டீயா?" பெரியவரின் மனைவி.

"பரவாலை, அதெல்லாம் ஒன்னும்..."

"சரி காபியே போடறேன், இந்த பிஸ்கட் சாப்பிட்டுக்கிட்டு இருங்க" உள்ளெ சென்று விட்டார்.

அந்த பெரியவர் எங்களிடம் பேச்சு கொடுத்தார். "எங்க சின்ன பையன் வீட்டுக்குள்ள நுழையும் போது அவனுக்கு கிடைச்சுருக்கு. அவன் தான் பர்ஸ இருந்த பேப்பர்ல கிடைச்ச நெம்பரெல்லாம் ட்ரை பண்ணி உங்களை பிடிச்சான்"

ஷோபாவின் நுனியில் நெளிந்துக் கொண்டு இருந்தேன்.

"பிஸ்கட் அப்படியெ இருக்கு, எடுத்துகங்க தம்பி"

ஒரு பிஸ்கட் உருவினோம். காப்பி வந்தது.

"சாமி படம் முன் வச்சிருக்கு, வரேன்" காப்பியை டேபிளில் வைத்து விட்டு ம‌றுப‌டியும் உள்ளெ போனார்.

அவர்களுடைய மகன் வந்து எதிரே அமர்ந்து, பயோகாண் - இல் வேலை செய்வதாகவும், என் அமெரிக்க வாழ்க்கை எப்படி என்றும், ஏன் வந்துட்டீங்க என்றும் விசாரித்துக் கொண்டிருந்தார்.

"சரியா இருக்கா பார்த்துக்கோங்க" அந்த அம்மா பர்ஸை என்னிடம் கொடுத்தார்.

நான் பர்ஸை திறந்து உள்ளெ இருந்த மொத்த பணத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்தேன், "இது உங்களுடையது, மறுக்காம எடுத்துக்குனும்"

பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது, "எங்களை இழிவு படுத்தாதீங்க" என்ன பேசியும் அந்த பெரியவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை. நன்றி சொல்லிவிட்டு திரும்பும் போது,

"சே... இப்படியும் மனிதர்களா..."

என்று எனக்குள் நெகிழ்ந்து விட்டேன்.

பின்குறிப்பு 1: லோகேஷ் நெம்பரில் போன் செய்து அவன் மூலமாக, பர்ஸ் கிடைத்த மேட்டர் தெரிந்து கொண்ட போலீஸ்காரர், இரு நாட்களாக எங்களை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.

பின்குறிப்பு 2: அந்த பெரியவரை சமாதானப்படுத்தி, ஒரு சின்ன மீன் தொட்டி பரிசு கொடுத்து, மீண்டும் ஒரு முறை காபி குடித்து விட்டு வந்தோம்.

8 comments:

  1. அண்ணா,

    ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்குண்ணா... அசத்தல் பதிவு. கலக்குங்கோ....

    பிரபாகர்.

    ReplyDelete
  2. நல்லா வந்திருக்கு. இப்ப அமெரிக்காவுல செட்டிலாகிட்டீங்களா இல்லையா?

    ReplyDelete
  3. can't you complain about that police?

    ReplyDelete
  4. அருமையான நடையும் எழுத்தும். Keep it up..

    உங்கள் அனுபவங்களை சிறுகதையாக எழுதலாம்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. திரும்ப வந்து 1 1/2 வருஷம் ஆகுது சங்கா....

    ReplyDelete
  6. உன்னைவிடவா தம்பி?

    மிக்க நன்றி சூர்யா அவர்களே...

    ReplyDelete
  7. hello shankar,

    Super ponga, nalla Gnabasakthi ungalukku...

    - Lokesh

    ReplyDelete
  8. லோகேஷ், உன்னை பத்தி எழுதியதும் தான், பதில் எழுதனும்னு தொனிச்சா?

    ReplyDelete