Tuesday, September 1, 2009

காக்டெயில்ஜூலை 10 அன்று, மைக்கேல் ஜாக்சனுக்கு அமெரிக்காவில் இன்டியானா மாநிலத்தில் உள்ள அவர் பிற‌ந்த ஊரான கேரியில் ஒரு நினைவு சின்னம் வைத்தது, நம்ம ஊர் ஆள் செந்தில் முருகானந்தம்.

மைக்கேல் ஜாக்சனை மானசீக குருவாக நினைக்கும், பிரபு தேவாவே, உருகி உருகி நயனை லவ்விக் கொண்டிருக்கிறார். அன்றாடம், உதவி வேண்டி பல்லாயிர கண‌க்கான நம்ம ஊர் மக்கள் ஏங்கி நின்று கொண்டிருக்கும் போது, அவர்களுக்கெல்லாம் உதவாமல், ஜாக்சனுக்கு நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று செந்திலுக்கு என்ன வந்தது?

விசயம் இது தான். இவர் அமெரிக்காவில் வைத்திருக்கும் "ஸ்டோன் பிளான்ஸ்" என்ற கம்பெனி, கல்லறைக்கு, மற்ற பல விசயங்களுக்கு, கல் தோண்டி, டிசைன் செய்து, பதித்து கொடுப்பது வரை எல்லாவற்றையும் செய்யும். இனி சாக போகும் பல்லாயிர கண‌க்கான ஜாக்சன் ரசிகர்களில் கொஞ்சம் பேராவது இவர்களுக்கு ஆர்டர் கொடுத்தால், இவருக்கு நன்றாக கல்லா கட்டும், அதான்.

மார்கெட்டிங் உத்தியில் நம்ம ஆட்களும் முன்னெறிவிட்டார்கள் என் பெருமை பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

உலகின் மிக சிறந்த இசை கலைஞ‌னுக்கு என்னாலான அஞ்சலி என கண்கலங்கி விகடனில் அளித்த பேட்டியை படித்த போது, சகிக்கமுடியவில்லை, சிரிப்புத்தான் வந்தது.

*************************************************************************************

100 வயது ஆரோக்கியமாக வாழ்வதற்கான மந்திரம் என்ன?

100 + 100 = 100 தான். அதாவது, உடலை வழுபடுத்த 100 மணிநேர உடற்பயிற்சி, மனதை வழுபடுத்த 100 மணிநேர யோகா, ஒவ்வொரு வருடமும் இதை தொடர்ந்தால், 100 வயதுக்கு வாய்ப்பு அதிகம், மண்லாரியில் சிக்காத வரை.

டிவியில் ஏதோ காலை நிகழ்ச்சியில் பார்த்ததாக, பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.

*************************************************************************************

நண்பர் காரைக்குடிகாரர். நான் வெஜ் பிரியர். சிக்கன் ஐட்டம் என்றால், வெட்டுவெட்டு என வெட்டுவார். அவரை பார்த்து இன்னோரு வெஜிடேரியன் நண்பர் சொல்லியிருக்கிறார்,

"நீ செத்து நரகத்துக்கு போனதும், உன்னால செத்த கோழிகளையெல்லாம் விட்டு உன்னை கொத்த விடுவாங்க பாரு...."

அதுக்கு நண்பர் சொன்ன பதில்,

"அதெல்லாம் நடக்காது மச்சி, அடடா, இங்கயும் வந்துட்டானான்னு, கோழிங்க எல்லாம் தெரிச்சு ஓடும்"

இதை கேட்ட நான் நண்பரிடம் சொன்னேன்,

"இது ரெண்டுமே நடக்காது, ஏன்னா, நீ நரகத்துல படுற அவஸ்தையை, சொர்கத்திலிருந்து கோழிங்க எல்லாம் பார்த்து ரசிக்கும்"

*************************************************************************************

Thursday, August 27, 2009

சர்தார்ஜி ‍ஜோக்ஸ் - 1வெண்ணிலா கபடி குழு திரைபடத்தில் ஒரு காட்சி, அதிக பரோட்டா தின்னும் போட்டி. இது நான் பல‌ வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்த, ஒரு சர்தார்ஜியின் ஜோக்கிலிருந்து உருவப்பட்டது, ஆனாலும் மக்களால் ரசிக்கும் படி இருந்தது. ஸோ, மக்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சேவை, நான் ரசித்த சில சர்தார்ஜியின் ஜோக்குகளை பகிர்ந்துகிரலாம்ன்னு... கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜோக்குகள் தொடரும்.

ஒரு நாள் ஒரு ல‌ண்ட‌ன் பீச்சில் நம்ம சர்தார்ஜி படுத்துக் கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். சர்தார்ஜியை கடந்து போன ஒருவ‌ர் நம்மாளை பார்த்து கேட்டார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.

கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் மற்றொருவர், சர்தார்ஜியிடம் அதே கேள்வி.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை லேசாக கடுப்பான சர்தார்ஜி, குரலை உயர்த்தி பதில் சொன்னார்,

"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"

கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

இந்த முறை உண்மையாகவே கடுப்பான சர்தார்ஜி "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".

சே, இந்த‌ இட‌மே ச‌ரியில்லை, 'ஒரே தொல்லையாக‌ இருக்கு'ன்னு த‌ன‌க்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற‌ இட‌த்துல‌ போய் ப‌டுக்க‌லாம்ன்னு சர்தார்ஜி கிள‌ம்பினார். போகும் வ‌ழியில் இன்னோரு சர்தார்ஜி ப‌டுத்துக்கொண்டிருப்ப‌தை பார்த்தார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த‌ முறை கேள்வி கேட்டது, ந‌‌‌ம்ம‌ சர்தார்ஜி.

"யா..." ப‌டுத்துக்கொண்டிருந்த‌ சர்தார்ஜி.

உடனே, ந‌ம்ம‌ சர்தார்ஜியின் மூளையில் ஆயிர‌ம் வாட்ஸ் ப‌ல்ப் எரிந்த‌து. ப‌டுத்துக்கொண்டிருந்த‌வ‌ரை பார்த்து சொன்னார்,

"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"

*********************************************************************************

ஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை கான்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"

கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. ந‌ம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

சர்தார்ஜியால‌ பொருக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்"

********************************************************************************

Wednesday, August 26, 2009

கிணறுசேலத்திலிருந்து தருமபுரிக்கு என் பெற்றோர் குடிபெயர்ந்த நேரம். நான் நான்காம் வகுப்பு, என் அண்ணன்கள் இருவரும் ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். ஏதோ காரணத்திற்காக மதியம் பள்ளிக்கு விடுமுறை. வீட்டிற்க்கு வந்தால், வீடு பூட்டி இருந்தது.

அம்மா மார்கெட் போயிருப்பதாய் பக்கத்து வீட்டில் தெரிந்து கொண்டு, அங்கேயே பையை வைத்து விட்டு, மூவரும் பக்கத்து வயல்களில் தும்பி, பட்டாபூச்சி பிடிக்க கிளம்பி விட்டோம்.

கடைசியில் போய் சேர்ந்தது வயலுக்கு நீர் இரைக்கும், பெரிய இரட்டை கிணறு. சேலத்திலிருந்த வரை இது மாதிரி கிணறையோ வயல்வெளிகளையோ பார்த்ததில்லை, அதில் விளையாடியதில்லை. தண்ணீர் குறைந்து இருக்கும் போது தான் அது இரட்டை கிணறு, நீர் நிறைந்த நாட்களில் அது மிகப் பெரிய கிணறு. இருவர் ஒரு சேர இறங்கி ஏற, கிணறு வெட்டும் போதே பாதை அமைத்து இருந்தார்கள்.

ஒருபக்கம் ஒரு முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் காலியாக இருந்தது. இறங்கினோம், யாருக்கும் நீச்சல் தெரியாது. அண்ணன்களின் பேச்சை கேட்காமல், கைகால் கழுவுகிறேன் என்று, நீருக்குள் முழுகி பாசிபடந்திருந்த கல்லில் கால் வைத்தேன், அது வழுக்கி விட, தலை கீழாக நீருக்குள் விழுந்தேன், அண்ண‌ன்க‌ளின் குய்யோ, முய்யோ க‌த்த‌ல் க‌டைசியாக‌ மெதுவாக‌ கேட்ட‌து.கண்விழித்து பார்த்த போது, அந்த பெரியவர் என் வயிற்றை அழுத்தி, முதல் உதவி செய்து கொண்டிருந்தார், கிண‌ற்றை சுற்றி மக்கள் கூட்டம். ஒருவர் அண்ணன்கள் இருவரையும், குச்சி வைத்து வெளுத்துக் கொண்டிருந்தார். இருவரும் அழுது கொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

"நீச்சல் தெரியாத சின்ன பையனை கிணத்துல தள்ளி கொல்ல பாக்குறீங்க... யார்ரா நீங்க?"

"ப‌க்க‌த்துல‌ தான் புதுசா குடிவ‌ந்திருக்கோம்"

"ப‌க்க‌த்துல‌ன்னா..."

"ந‌டேச‌ க‌வுண்ட‌ர் தெருவுல‌"

"இந்த‌ பைய‌னை ஏண்டா கிணத்துல தள்ளினிங்க‌?"

"எங்க‌ த‌ம்பிதான், விளையாட‌ வ‌ந்தோம், தெரியாம‌ த‌வ‌றி விழுந்துட்டான்"

எல்லாரும் ப‌ள்ளி சீருடை அணிந்திருந்தோம்.

"ப‌டிக்கிற‌ புள்ள‌ங்க‌ளுக்கு கிண‌த்துல‌ என்ன‌ விளையாட்டு? ம‌றுப‌டி உங்களை இந்த‌ ப‌க்க‌ம் பார்தோம், அவ்வ‌ள‌வு தான்.... ஒழுங்கா வீடு போய் சேருங்க" விரட்டிவிட்டார்கள்.

மூவ‌ரும், வெளியே வ‌ந்தோம். 'எல்லாம் இவ‌னால‌ தான், சொன்ன‌ கேட்டா தானே...' ந‌ங்கென்று த‌லையில் ஒரு 'கொட்டு' விழுத்தது, பெரிய‌ அண்ண‌னிட‌மிருந்து.

இப்போது அழுது கொண்டிருந்த‌து நான்.

மொத்த‌மாக‌ ந‌னைந்திருந்தேன், அப்ப‌டியே வீட்டுக்கு போனால், அர்ச்ச‌னையும், த‌ர்மஅடியும் தொட‌ரும், என்ன‌ செய்வ‌து என எல்லோருக்கும் யோச‌னை.

க‌டைசியாக‌ எல்லாரும் ஒரு ம‌ன‌தாக‌ எடுத்த‌ முடிவின் ப‌டி, மொத்த‌ ஆடைக‌ளையும் அவிழ்த்து, நான் ஒரு ம‌‌ர‌த்த‌டியில் ஒழிந்து கொள்ள‌, செடிகளின் மீது காய‌வைத்து மறுபடியும் போட்டுக்கொண்டு வீடுவ‌ந்து சேர்ந்தோம்.

வெற்றிக‌ர‌மாக‌ உண்மையை வீட்டில் ம‌றைத்து உல‌விக்கொண்டிருந்த, அடுத்த இரண்டாவது நாள், எங்க‌ள் குட்டு வீட்டில் க‌ழ‌னித‌ண்ணீர் எடுக்க‌ வ‌ந்தவ‌ளின் மூல‌ம் வெளிப‌ட்ட‌து.

எங்களை எங்க‌ள் வீட்டில் வைத்தே பார்த்த‌ அவ‌ர், 'ஏம்மா இந்த‌ புள்ளைங்க‌ உங்க‌ புள்ளைங்க‌ளா... அஞ்சு நிமிசம் விட்டிருந்தா, அன்னிக்கு, இந்த சின்ன புள்ள செத்திருக்கும்...' என ஆரம்பித்து எல்லாவற்றையும் என் அம்மாவிடம், போட்டு கொடுத்து விட்டு போய்விட்டார்.

என்ன நடக்க போகிறதோ என் ப‌ய‌ந்த என‌க்கு அம்மாவிட‌மிருந்து எந்த‌ எதிர்வினையும் வராதது அப்போது பெரும் சந்தோஷம். ஆனால், அவ‌ருடைய‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்கி இருந்ததற்கான அர்த்தம், அப்போது புரியவில்லை. ஒரு குழ‌ந்தைக்கு த‌ந்தையான‌ பின்பு இப்போது புரிகிற‌து.

அடுத்த வாரத்தில், ப‌க்க‌த்து வீட்டு மாமாவிட‌ம் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்ள‌ ஏற்பாடான‌து. அதன் பிறகு, ப‌ட‌த்தில் உள்ள‌து போல‌ ப‌ம்புசெட்டு ரூம் மேல் ஏறி கிண‌ற்றில் குதித்து விளையாடிய‌ நாட்க‌ள், இப்போதும் ப‌சுமையாக‌ நினைவில் இருக்கிறது.

மறக்காம பின்னூட்டம் போடுங்க சாமியோவ்...