Thursday, January 25, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 9

ஹாத்துவேயின் முடிவுக்குப்பின் டியேகோ வால்கியூஸ் அவனது ஸ்டெயிலில், கொஞ்சம் கொஞ்சமாக கியூபாவை முழுமையாக ஆக்கிரமித்தான்.

பணத்திற்காக ஸ்பெயினிலிருந்து புதிய உலகை நோக்கி வந்த ஐரோப்பியர்கள் கியூபாவிலும் குவிய ஆரம்பித்தார்கள். முதலில் வந்தவர்கள் அத்தீவில் வாழ்ந்த அனைத்து செவிந்தியர்களையும் ஏற்கனவே அடிமைகளாக வைத்திருந்த படியால், புதியவர்களுக்கு அடிமைகள் கிடைக்கவில்லை. ஒருசிலர் ஒரு கிராமம் முழுக்க இருந்த அடிமைகளுக்கு உரிமையாளர்களாகவும், ஒருசிலர் அடிமைகளே இல்லாமலும் இருந்தது, வந்தேரிகளுக்குள் பல குழப்பத்தையும், சிறு கலவரங்களையும் உருவாக்கியது.

அடிமைகள் கிடைக்காத அதிருப்திகாரர்கள் ஒன்றிணைந்து தங்கள் அதிகார வரம்பை விரிவு படுத்தவும், புதிய அடிமைகளை தேடியும், கியூபா தீவை சுற்றியிருக்கும் நிலப்பரப்பை கண்டறிந்து ஆக்கிரமிக்கும் நோக்கோடு ஒரு புதிய திட்டம் தீட்டி, கவர்னரான டியேகோ வால்கியூஸின் ஒப்புதலுக்கு அனுப்பினார்கள். அப்படி பயணம் மேற்கொண்டால் வரும் லாபத்தை பங்கு போட்டுக்கொள்ளும் முறை மீது கவர்னருக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு வைத்தான் கவர்னர் வால்கியூஸ். ஒருவழியாக அதிருப்திக்காரர்களின் தொடர் முயற்சியின் மூலமாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கு பிரித்தலில் உடன்பாடு ஏற்பட்டு, தானே கப்பல் கட்டும் செலவை ஏற்று கொள்வதாக கூறி அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தான். அந்த குழுவும் மூன்று கப்பல்களில் 110 பேருடன் மேற்கு நோக்கி பயணத்தை துவங்கியது. 1517-ல் புறப்பட்ட குழுவிற்கு தலைமை தாங்கி நடத்தி சென்றது பிரான்சிஸ்கோ ஹெர்னாண்டஸ் என்பவன்.

இதற்கிடையில் 16-ம் நூற்றாண்டின் முதல் பத்து வருடத்தில் ஸ்பானியோலாவிலிருந்து நாலாபுறமும் புது உலகை மேலும் கொள்ளையடிக்க, பலரின் தலைமையில் பல குழுக்கள் பயணங்களை மேற்கொண்டது.

அவ்வாறு சென்றவர்கள் சில இடங்களில் ஸ்பானிய காலனியை அமைத்தார்கள். இன்றைக்கு Darién Gap எனபடும் வட மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கும் பகுதியில் வடக்கில் ஒரு குழுவும் (இன்றைய தெற்கு பனாமா) தெற்கில் ஒரு குழுவும் (இன்றைய வடக்கு கொலம்பியா) செட்டில் ஆனது. தீவுகள் அல்லாது முதன் முதலில் மெயின் லேண்ட் எனப்படும் அமெரிக்க கண்டத்தில் நகரம் உருவாக்கப்பட்டது இந்த பகுதியில் தான். தெற்கு குழுவின் தலைவனான வாஸ்கோ நூன் டி பல்போவா தான் பசுபிக் பெருங்கடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியவனும் ஆவான். [அதற்கு முன் அட்லாண்டிக் பெருங்கடலின் மறுபக்கம் தான் ஆசியாவின் கிழக்கு கடல் பகுதியாக இருப்பதாக நம்பினார்கள், Darién Gap மற்றும் பசுபிக் பெருங்கடல் பற்றி தனியாக பார்ப்போம்] ஆனால் இந்த வடக்கு மற்றும் தெற்கு ஆக்கிரமிப்பாளர்களுக்குள் சதா சண்டை. இந்த சண்டைப்பற்றி தலைமைக்கு தெரிவிக்க வால்டிவியா என்பவனின் தலைமையில் ஒரு குழு ஸ்பானியோலாவிற்கு புறப்பட்டது. அவர்களின் கெட்ட நேரம் அப்பயணக்கப்பல் புயலில் சிக்கி பாறைகளில் இடித்து சேதமடைந்து இன்றைய ஜமாய்க்கா என்னும் தீவில் கரை ஒதுங்கியது. அதில் தப்பியவர்கள் இருபது பேரும், ஆபத்து காலத்தில் தப்பிக்க கப்பலில் கொண்டு செல்லும் சிறு படகில் ஏறி பயணத்தை தொடர்ந்தார்கள். சிறிய படகு, சரியான துடுப்புகள் இல்லை, தண்ணீர் இல்லை, உணவுப்பொருட்கள் இல்லை, அதன் விளைவாக வழியிலேயே இன்னும் சிலர் இறக்க, அந்த படகு கற்றடித்த திசைக்கு அலைகழித்து, இன்றைய மெக்ஸிகோவின் யுகேடன் என்னும் தீபகற்பத்தில் கடைசியில் கரை ஒதுங்கியது.

அங்கிருந்த மக்கள் ஸ்பானியோலாவில் இருந்த மக்களை போல் அல்லாது சற்று நாகரீகத்தில் முன்னேறியவர்களாக இருந்தார்கள். புகழ் பெற்ற மாயன் நாகரீகத்தின் எஞ்சியவர்கள். போர்குணம் கொண்டவர்கள். கொரில்லா முறையில் தாக்குதல் புரிவதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக சிதறிக் கிடந்தாலும், நாகரீகமுறை ஒன்றாகத்தானிருந்தது. அவர்களுக்குள் பிரிவு சண்டைகள் சர்வ சாதாரணம். (தலைத்தோங்கி இருந்த மாயன் நாகரீகத்தை பற்றியும் ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே அது எப்படி அழிந்து போயிருக்கலாம் என்பது பற்றியும் அடுத்த வாரம் பார்ப்போம்).

யுகேடனில் கடற்கரையில் சிறு படகில் கரை ஒதுங்கியவர்கள் மொத்தம் 12 பேர் மட்டுமே! அங்கு வாழ்ந்த ஒரு மாயன் பிரிவினர் அவர்களை பிடித்து தலைவனின் முன் நிறுத்த, தலைவனின் ஆணைப்படி ஊர் திருவிழாகோலம் பூண்டது. விழாவின் முடிவில் தங்கள் தெய்வத்திற்கு நன்றி சொல்லி, கேப்டன் வால்டிவியா உட்பட ஆறு பேரை பலியிட்டு அவர்களின் உடல்கள் ஊர் முழுக்க விருந்தாக வினியேகிக்கப்பட்டது.

அதில் மிகவும் மெலிந்து காணப்பட்ட ஜெரோனிமோ டி அகிலார் மற்றும் 5 பேரையும் விருந்தாக்குவதை அவர்கள் கொழுக்கும் வரை தள்ளிப்போடலாம் என முடிவானது. அதுவரையிலும் தங்களின் அடிமைகளாக இருக்கட்டுமே என தங்களுடன் வைத்து கொண்டார்கள்.

சிறிது நாட்கள் கழித்து அடிமையாக இருந்த ஜெரோனிமோ டி அகிலார்-ம் இன்னொருவனும், அந்த பிரிவினரிடமிருந்து தப்பி அவர்களின் எதிரிப்பிரிவின் தலைவனிடம் தஞ்சம் அடைந்தார்கள். அங்கு அவர்களின் தலை தப்பித்தது ஆனால் அங்கும் அடிமையாகத்தான் வாழ்க்கையை தொடர முடிந்தது. அந்த தலைவனுக்கு உண்மையாவனாக நடந்த கொண்டு, அங்கிருந்த ஒரு மாயன் குலப்பெண்ணையே மணந்து அவர்களின் மொழிகளை நன்கு அறிந்து, முழு நேர செவ்விந்தியனாக மாறிப்போனான் ஜெரோனிமோ டி அகிலார். இவன் தான் மெயின் லேண்டை ஆக்கிரமிக்க கியூபாவிலிருந்து பின்னாளில் வந்த ஆக்கிரமிப்பாளர்களின் முக்கிய மொழிபெயர்ப்பாளனாக இருந்தான்.

இந்த மொழி பெயர்ப்பு தான், செவ்விந்தியரிடம் முதலில் புரிந்து கொண்டு நட்பு பாராட்டவும், பின்பு அவர்களின் பிரிவுகளுக்குள் பிரிவினை அதிகரிக்கவும், கடைசியில் மொத்தமாக அனைவரையும் ஆக்கிரமிக்கவும் பேருதவியாக இருந்தது.

No comments:

Post a Comment