Tuesday, January 9, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 7

அரசி அனகோனா('தங்க மலர்') :

கரீபியன் தீவுகளின் கியூபாவிற்கு அடுத்து இரண்டாவது மிக பெரிய தீவாக இருப்பது, இன்றைய ஹெட்டி மற்றும் டொமினிக் ரிபப்ளிக் நாடுகள் இணைந்த தீவு. அது ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்கு தலைவர்களும் இருந்தார்கள். அதன் ஒரு பகுதியின் தலைவனைத்தான் (சில வாரங்களுக்கு முன் பார்த்தோமே) ஸ்பானியர்கள், ஒரு பளபளப்பான கைகால் விலங்கைக்காட்டி, இது அரசர்கள் அணிந்து கொள்ளும் அணிகலன், எனக்கூறி கைது செய்து ஸ்பெயின் கொண்டுபோனார்கள்.

அத்தலைவனின் பெயர், caonoba, கப்பல் ஸ்பெயின் போய் சேரும் முன், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். ஸ்பானிய அரசு அவர்களின் காலனியை அம்மண்ணில் அமைக்க எதிர்ப்பு காட்டியதால் அவரை கைது செய்ததாக கூறிக்கொண்டது.

அம்மன்னனுக்கு பிறகு அவரது மனைவியான Anacaona அந்நாட்டின் அரசியாக பதவி ஏற்று கொண்டாள். பெரும்பாலான தீவை ஸ்பானியர்கள் ஆக்கிரமித்த பின்னும், ஒரு சிறு பகுதி மட்டும் அனகோனாவின் ஆட்சியின் கீழ் இருந்தது.

அனகோனா என்றால், அவர்களது மொழியில் தங்க மலர் என்பதாகும். பெயருக்கு ஏற்றார் போல், அவளும் மிகச்சிறந்த அழகி. அதுமட்டுமில்லாது, நடனத்திலும், பாடல் இயற்றுவதிலும், சிறந்து விழங்கினாள். பொதுவாக செவ்விந்தியர்கள் அவர்களின் பெயரை இயற்கையையும், விலங்கினங்களின் பெயரையும் உவமையையும் கலந்து வைப்பார்கள். தாக்கும் ஓனாய், வலிமையான எருது, அழகிய நிலவு, உயர்ந்த மரம், பளபளக்கும் ஒளி, வசந்த காலம், வானவில், சீரும் பாம்பு, மிகசிறியவன், ஆளுமையானவன் இதைப்போன்று தான் இருக்கும் அவர்களின் பெயர்கள். 'தங்க மலர்' (Anacaona) கூட அந்த வகையை சேர்ந்தது தான். கணவரின் கைதுக்கு பிறகு எஞ்சிய சிறு பகுதியை அவள் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருந்தாள்.

செவ்விந்தியர்களிடம், கொலம்பஸூக்கு பின் வந்தவர்களும் அதைவிட கொடூரமாகத்தான் நடந்து கொண்டார்கள். Nicolas De Ovando என்பவன் கொலம்ஸுக்கு பின் வந்த கவர்னரில் ஒருவன், பன்மடங்கு வெறி கொண்டவன். செவ்விந்தியர்களை அடிமையாக மட்டுமே பார்க்க தெரிந்தவன், அவனால் அடிமைகள் ஆட்சியில் இருப்பதை சகிக்க முடியவில்லை. அனகோனாவிடம் தந்திரமாக சமாதானம் பேசினான். தன்னுடைய கணவனின் கைதுக்கு பிறகும், அவள் ஸ்பானியர்களை எதிரிகளாக பார்க்காமல், சமாதான பேச்சுக்கு சம்மதித்தாள். தன்க்கு கீழ் இருந்த 8 தலைவர்களையும் அழைத்து பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தாள்.

பெரிய கூடாரத்தில், சமாதான பேச்சும் விருந்தும் கோலாகலமாக தொடங்கியது. பாதி விருந்தில் ஓவண்டோ(Ovando) வின் ஆட்கள், கூடாரத்தை சுற்றி வளைத்து தீயிலிட்டு தரைமட்டமாக்கினார்கள். முன்னமே திட்டமிட்டதால் ஸ்பானியர்கள் அனைவரும் தீயிலிருந்து தப்பி ஓடி விட, செவ்விந்தியர்கள் அனைவரும் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அதையும் மீறி தீயிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்தவர்களை சுற்றியிருந்த ஸ்பானியர்கள், தங்களின் வாளுக்கு இறையாக்கினார்கள். சமாதானம் பேச வந்து, அனைத்து தலைவர்களையும் ஓரிடத்தில் சேர்த்து, தீயிட்டும், வாளால் வெட்டியும் அனைவரின் கதையையும் முடித்தார்கள்.

அரசி அனகோனாவை மட்டும் கொல்லாமல், கைது செய்து ஓவண்டோ முன் நிறுத்தினார்கள். ஸ்பானியரின் காலனி விரிவாக்கத்தை எதிர்த்தது தான் இந்நிகழ்விற்கும் காரணம், என விளக்கமளித்தது அவர்கள் உருவாக்கிய கோர்ட். கைது செய்யப்பட்ட அனகோனாவை உயிருடன் மன்னித்து விட ஒரு கடைசி வாய்ப்பு கொடுப்பதாக கூறினான் ஓவண்டோ. ஆட்சியை விட்டு விட்டு, யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல், ஸ்பானியர்களுக்கு மட்டும் பணி புரியும் பாலியல் அடிமையாக இருக்க ஒப்புக்கொண்டால், விடுதலை செய்வதாக அவளுக்கு தெரிவிக்கப்பட்டது. அத்தீர்ப்பை எதிர்த்தாள் அவள். அதனால் எதிர்ப்பவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டி, அனகோனாவை அனைவரின் முன்னிலையில் பொதுவெளியில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். அப்போது அவளுக்கு 29 வயது மட்டுமே!

உயிரை விட மானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவளின் செயல், இன்றைய ஹெட்டி (Haiti) மற்றும் டாமினிக் ரிபப்ளிக் (Dominic Republic) நாட்டு வரலாற்றில் அனகோனாவிற்கு ஒரு முக்கிய இடத்தை பிடித்து கொடுத்து விட்டது. நாம் கண்ணகியை கொண்டாடுவதை போல போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஹெட்டியர்கள்.

மாவீரன் ஹென்றிக்குல்லோ:

அந்த பலரின் உயிரை குடித்த தீசூவாலைகள் அடங்கியபின் அந்த சாம்பலில் நின்றிருந்த சிறுவன் தான் ஹென்றிக்குல்லோ. அனகோனாவின் சகோதரன் மகன், தன் தந்தை மற்றும் தாத்தாவின் உயிரை குடித்த, அத்தையை தூக்கிலிட்ட ஸ்பானியர்களில் ஒரு நற்குணம் கொண்ட பாதிரியார் ஒருவரின் கண்ணில் அவன் பட, அவர் அவனை கிருத்துவனாக மாற்றி அவனுக்கு ஹென்றிகே என பெயர் மாற்றி வளர்த்து வந்தார்.

ஸ்பானியர்களுடன் வளர்ந்து வந்தாலும் அச்சிறுவனின் மனதில் தன் குடும்பத்தை நெருப்பில் இட்டு அழித்த வந்தேறிகளின் நம்பிக்கை துரோக செயல் பசுமரத்தாணி போல என்றும் நிறைந்திருந்தது. வளர்ந்த பின் லூசியா என்னும் செவ்விந்திய பொண்ணை மணந்து குடும்பதை நடத்த ஆரம்பித்தான். வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிந்த அக்காலத்தில், அப்போதைய அரசின் புதிய சட்டம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

நிலம் வைத்திருக்கும் ஸ்பானியர்கள், அந்த நிலத்தில் வாழும் ஸ்பானியர் அல்லாதவரை தங்கள் அடிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் அச்சட்டத்தின் சுருக்கம்.

ஒவ்வொரு ஸ்பானியரும் பல கிராமங்களை தங்களின் கீழ் வைத்திருந்ததால், ஹென்றிகேவை அவன் குடும்பத்தோடு வெனிஸூலா என்பவனின் அடிமையாக மாற்றியது அச்சட்டம். வெனிஸூலாவின் கரும்புத்தோட்ட தொழிலாளியாக மாற்றப்பட்டான். சொன்னபடி கேட்டவில்லையெனில் தண்டனைகள் கடுமையானதாக இருக்கும்.

மரங்களில் தொங்கவிட்டு சாட்டையடி கொடுத்து மூர்ச்சையானதும், அப்படியே ஒரு இரவு முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலை தோட்ட வேலைக்கு அனுப்புவார்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே! இது போல இன்னல்கள் பல விதம். தங்கள் அடிமையை அடையாளம் கொள்ள, முதலாளிகள் மாடுகளுக்கு இடுவதை போல தங்களுக்கென்று தனி முத்திரையை அடிமைகளின் உடலில் பதிப்பார்கள். அடிமைகளுக்கு பிறக்கும் குழந்தைகளும், அந்த முதலாளிகளுக்கு அடிமைகள் தான்.

அடிமைகள் இந்த கொடுமைகளை எதிர்த்து போராட அச்சட்டத்தில் இடமில்லை. பல முறை தட்டி கேட்டு, அதற்கான தண்டனையை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்த ஹென்றிகே வெகுண்டெழுந்தது, முதலாளி வெனிஸூலா அவன் மனைவி லூசியாவை கற்பழித்த பிறகு தான். அதன் பின்னர், தன்னை போல பாதிக்க பட்ட தன் இனத்தவர் சிலருடன் தப்பி சென்று, அருகில் இருந்த மலைகுகைகளில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்.

மலையின் உச்சியில் உள்ள குகைகளில் குழுந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்களை இருக்க செய்து விட்டு, ஹென்றிகேவும் இளம் வயதினரும் அவர்களுக்கு பாதுகாப்பாக உச்சிக்கு செல்லும் பாதைகளில் உள்ள குகைகளில் தங்கி தங்கள் இனைத்தை பாதுகாத்தார்கள். பாதைகளில் பெரிய பாறைகளை கொண்டு மூடிவிட்டு அங்கேயே காவல் காத்த படியால் ஸ்பானியரால் அவர்களை நெருங்க கூட முடியவில்லை.

பெண்கள் கோழி பண்ணை வைத்து, உருளை கிழங்கை பயிருட்டு, தன் இனத்தவரின் உணவு தேவையை பார்த்து கொண்டார்கள். ஸ்பானிஸ் அரசு தப்பிஓடியவர்கள் அனைவரும் போராளிகள் என முத்திரை குத்தி, அவர்களை பிடிக்க பல வழிகளில் முயன்றது. ஆனால் அந்த காட்டு மலைகளை நன்றாக தெரிந்திருந்து கொரில்லா முறையில் யுத்தம் செய்த வீரர்களிடம், ஸ்பானிய படை பல முறை அடிபட்டு உயிருக்கு பயந்து பின்வாங்கி ஓடியது.

மரத்தால் ஆன கம்பு, வேல்கள், மற்றும் மீன் எலும்புகள் போன்ற சிறு ஆயுதங்களை வைத்திருந்த, எண்ணிக்கையிலும் மிக சிறிய படையை வைத்திருந்த ஹென்றிகே ஸ்பானிய படைகளுக்கு 14 ஆண்டுகள் சிம்ம சொப்பனமாக விளங்கினான். தங்கள் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே ஸ்பானிய படை வீரர்களை கொல்லலாம் என்றும், பழிதீர்க்க வேண்டி யாரையும் கொல்ல வேண்டாம் எனவும் தங்கள் வீரர்களுக்கு ஆணையிட்டிருந்தான். ஒருமுறை போரின் போது, தன் முதலாளியான வெனிஸூலா சிக்கிக்கொண்டான், தன்னை கொடுமை படுத்திய, தன் மனைவியை கற்பழித்த அந்த பாதகனைக்கூட உயிருடன் மற்ற போர் வீரர்களுடன் சேர்த்து விடுவித்து விட்டான். அது தான் செவ்விந்தியரின் உயர்ந்த குணம்.

பல முறை போரில் படு தோல்வி அடைந்து அவமான பட்ட அரசு, அவனை போரில் வெல்ல முடியாது என முடிவு செய்து சமாதானத்தை கையிலெடுத்தது. பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. சமாதான பேச்சு வார்த்தையின் போது தன் தந்தையை நெருப்பில் பறி கொடுத்த ஹென்றிகே, இம்முறை அரசை நம்பத்தயாரில்லை.

ஒவ்வொரு இரவும் தானே முக்கிய வழிதடங்களை விடியும் வரை காவல் காத்து அதிகாலையில் மட்டுமே மற்ற வீரர்களிடம் பாதுகாப்பு பணியை ஒப்படைத்து தூங்க செல்வான் ஹென்றிகே.

மேலும் நான்கு ஆண்டுகள், சமாதான பேச்சுக்கு ஒத்துக்கொள்ளாதவன், தன்னை குழத்தையாக இருந்த போது காப்பாற்றிய பாதிரியாரின் மூலம் தூது விடவும் கடைசியில் ஒப்புக்கொண்டான்.

பாதிரியாரின் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் ஸ்பானிய அரசு கடைசியில் அடி பணிந்தது. தன்னை நம்பி வாழும் தன் இனத்தவர் 4000 பேருக்கும் சுதந்திரமாக வாழ எந்த தடையும் இருக்ககூடாது என்ற ஹென்றிகேவின் வேண்டுகோளை அரசு ஏற்றுக்கொண்டது. அவர்களின் 14 ஆண்டு கால போராட்டமும் முடிவுக்கு வந்தது.

இன்றைக்கும் ஹென்றிகே ஒரு மாவீரனாக போற்றப்படுகிறான். கால போக்கில் அந்த 4000 பேரும் அவர்களின் சந்ததியருக்கும் என்ன நடந்தது என்று வரலாற்றில் சரியான குறிப்புகள் இல்லை, ஆனால் ஹென்றிகேவிக்கு பின் வந்த நூற்றாண்டில், அந்த தீவில் வாழ்ந்த செவ்விந்ததிய இனம் முற்றிலுமாக அழிந்து விட்டதாக கணக்கெடுப்பில் உள்ளது.

தொடரும்....

No comments:

Post a Comment