Saturday, January 13, 2018

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 8



இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி வரலாற்று புத்தகத்தில் படித்திருப்பீர்கள் தானே... சுற்றிலும் மதில் சுவரால் ஆன மைதானத்தில் கூடிய மக்களை, எல்லா வழிகளையும் அடைத்து விட்டு ஒரே ஒரு வாயிலை மட்டும் திறந்து விட்டு, அதில் வெளியேறியவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டு பொசுக்கிய கோர படுகொலை நிகழ்ச்சி. அதை நடத்தியவன் ஜெனரல் டையர் என்பவன். தகவல் தொடர்பு இருந்த காலத்தில் நடந்த இது உலகிற்கு நன்றாக தெரியும்.

தகவல் தொடர்பு இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் கூண்டோடு அழிக்க பட அல்லது எஞ்சிய சிலர் எழுத்தறிவு இல்லாமல் இருந்தால், என்னவாகும்? இது போன்ற ஒரு நிகழ்வை நடத்திய ஜெனரல் டையரே அதைப்பற்றி பெருமையாக எங்காவது குறிப்பிட்டால் தான் உலகிற்கு தெரியும்.

செவ்விந்தியர்களுக்கு நேர்ந்தது இது தான். அக்காலத்தில் புதிய உலகம் பல ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் பார்த்திருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் அம்மாதிரியான நிகழ்வில் பங்கேற்ற ஸ்பானியர்களின் குறிப்பிலிருந்து கிடைத்தவை மட்டுமே. செவ்விந்தியர்களுக்கு பல மொழிகள் இருந்ததே தவிர எழுத்து இல்லை. அதனால் பல இன அழிப்பு சம்பவங்கள் வரலாற்றில் இடம் பிடிக்காமல் போய் விட்டது. உலகுக்கு தெரிந்த ஒரு சில சம்பவங்களும் கூட ஸ்பானியர்கள் பார்வையில் உலகிற்கு வெளிகாட்டப்பட்டவை தான். அதுவே இவ்வளவு குரூரமாக இருக்கிறதே, உண்மையில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

ஹாத்துவே(Hatuey):



ஹெட்டி மற்றும் டோமினிக் ரிபப்ளிக் இணைந்த தீவை கொலம்பஸ் ஸ்பானியோலா(Hispaniola) என்று பெயரிட்டு, ஸ்பெயின் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது முன்பே பார்த்தோம்.

அந்த தீவை ஸ்பானியர்கள் முமுவதுமாக ஆக்கிரமித்த போது, அத்தீவின் ஒரு பகுதியின் தலைவனாக இருந்த ஹாத்துவே அங்கிருந்து தப்பிச்சென்று கியூபாவில் தஞ்சம் அடைந்தான். அங்கிருந்த தன் இன மக்களிடம் ஸ்பானியோலாவில் நடக்கும் கொடுமைகளை எடுத்து சொல்லி, அது மிகவிரைவில் கியூபாவிலும் நடக்கும் அதனால் ஸ்பானியர்களை எதிர்க்கவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தினான்.

Batolome De Las Casas எனும் பாதிரியாரின் கூற்றுப்படி, ஹாத்துவே கியூபாவிலிருந்த தன் இனமக்களிடம் இருந்த தங்கத்தை காட்டி சென்னது இதுதான்:

“தங்கம் தான் ஸ்பானியர்கள் வழிபடும் கடவுள். இதற்காகத்தான் அவர்கள் சண்டையிடவும், கொல்லவும் செய்வார்கள். நம்மை அடிமைகளாகவும் ஆக்குவார்கள், அதனால், இவற்றை கடலில் எறிந்து விடுங்கள். அந்த மிருகங்களின் பேச்சு, அவர்களின் அமைதியான கடவுளை பற்றியதாகவும், எல்லோரும் சமம் என்றும் இருக்கும், ஆனால் உண்மையில் நம் மண்ணிலேயே நம்மை அடிமையாக்குவார்கள். பரிசுத்த ஆன்மாவை பற்றி, சொர்கத்தை பற்றி, நரகத்தை பற்றி பேசுவார்கள், முடிவில் நம் உடமைகளை கொள்ளை அடிப்பார்கள், நம்மின பெண்களை கற்பழிப்பார்கள், நம் பெண்குழந்தைகளிடம் கீழ் தரமாக நடந்து கொள்வார்கள். நம் கண்ணியத்திற்க்கும், விவேகத்திற்க்கும் ஒருகாலத்திலும் சமமாகாத அவர்கள், நம்முடைய ஆயுதத்தால் உடைக்க முடியாத இரும்பினாலான கவசத்தை அணிந்திருப்பார்கள்"

உண்மையில், பேச்சு வேறு அனுபவம் வேறல்லவா? இப்பேச்சை கேட்ட ஒரு சிலர் மட்டுமே ஹாத்துவே பக்கம் சென்றார்கள், ஆனால் பெரும்பாலனவர்கள் உண்மையை அறியாததால், அப்பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஹாத்துவேயும் தன்னுடன் இணைந்த 400 பேருடன் கொரில்லா போருக்கு ஆயுத்தமானான்.

இன்னிலையில் கிரிஸ்டோபர் கொலம்பஸின் மகன் டியேகோ கொலம்பஸ் ஸ்பானியோலாவின் நான்காவது கவர்னராக பெறுப்பேற்றுக் கொண்டான். அவன் டியேகோ வால்கியூஸ் என்பவனை கியூபாவை ஆக்கிரமிக்க அனுப்பினான்.

300 படை வீரர்களுடன் கியூபாவின் கடற்கரையில் வந்திறங்கிய டியேகோ வால்கியூஸ், அங்கிருந்த மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் சந்திக்கவில்லை. அதனால் அவனால் கியூபாவில் நிரந்தரமாக இருக்க முடிந்தது. கியூபாவில் கோட்டை அமைத்து நகரத்தை நிர்மானிக்க எதிர்ப்பு காட்டியது ஹாத்துவே மட்டுமே, அவ்வப்போது அவன் நடந்திய கொரில்லா தாக்குதலால் நான்கைந்து ஸ்பானியர்கள் இறக்க நேர்ந்தது. ஆனால் பெரியதாக ஒன்றும் ஆகவில்லை.

ஒருமுறை ஒரு கிராமத்திற்கு வால்கியூஸும் அவனது படையும் வந்த போது, அவர்களை வரவேற்று உண்ண உணவும் விலை உயர்ந்த பரிசுகளையும் கொடுத்து வரவேற்றனர் அம்மக்கள். உணவை உண்டவுடன், வால்கியூஸ் ஆணைப்படி அனைவரையும் சுற்றி வளைத்து, வாளாலும் துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தினார்கள் அவனது வீரர்கள்.

அமைதியானவர்களை தாக்கவேண்டாம் என நான் சொன்னது யாரும் கேட்கவில்லை. அன்றைய தினம் மட்டும் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட ஆன்மாக்கள் அமைதியானது, இரத்தம் ஆறாக ஓடியது, எஞ்சியவர்கள் அடிமையாக்க பட்டார்கள், என்னால் ஏதும் செய்யமுடியவில்லை என Las Casas குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவில் வால்கியூஸ் சென்ற இடம் எல்லாம் இத்தகைய கொடூரம் தான் நடந்தது. இதனால் அவனால் ஸ்பான்யோலாவை விட வேகமாக கியூபாவை ஆக்கிரமிக்க முடிந்தது. அங்கு மக்கள் தொகையும் அதிகம் என்பதால் அடிமைகளும் நிறைய கிடைத்தார்கள். தங்க சுரங்களிலும், கரும்பு தோட்டத்திலும் வேலை செய்ய மனித சக்தி நிறைந்திருந்ததால், பணமும் நிறைய கிடைக்க ஆரம்பித்தது. (உலகின் சர்க்கரை கிண்ணமாக கியூபா மாறவும் இதுவே அடிப்படை) இதனால், தலைகனம் தலைக்கேற தன்னை கியூபாவிற்கு அனுப்பிய டியேகோ கொலம்பஸுக்கு அடிபணியாமல், நேரடியாக ஸ்பெயினில் உள்ள மன்னனுக்கு கீழ் வந்து, கியூபாவின் கவர்னராக ஆகிவிட்டான். போதாகுறைக்கு ஸ்பெயின் மன்னனின் அனுமதியுடன், ஸ்பானிஸ் பேசும் ஆப்பிரிக்க அடிமைகளையும் இறக்குமதி செய்து கொண்டான். இதை போன்று தலைவனை எதிர்த்து, தான் தோன்றி தனமாக செயல் படும் குணம், அவனுக்கே பின்னாளில் ஆப்பு வைக்கும் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. எப்படியோ, அக்காலத்தில் பணத்தாசையில் ஸ்பெயினிலிருந்து வந்த வீரர்களிலேயே, அவன் தான் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தான்.

இதற்கிடையே, மூன்று ஆண்டுகள் குடைச்சல் கொடுத்து வந்த ஹாத்துவேவை வேட்டை நாய்கள், மற்றும் போராசை பிடித்த உள்ளூர் அடிமைகளின் உதவியுடன் கைது செய்தான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இம்முறை பொது இடத்தில் மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்ல முடிவானது.

மரத்தில் கட்டப்பட்டிருந்த ஹாத்துவேவிடம் ஒரு மத குரு வந்தார். அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல் இதோ:

"இறப்பதற்கு முன்பு உனக்கு ஞான ஸ்நானம் செய்து வைக்கிறேன்"

"எதற்கு?”

"கிருத்துவனாக இறந்தால், சொர்கத்திற்கு செல்லலாம்.”

“அப்படியானால், ஸ்பானியர்கள் இறந்தால் எங்கு செல்வார்கள்?"

“சந்தேகம் என்ன? சொர்கத்திற்க்கு தான்...”

"நான் நரகத்திற்கே போகிறேன், கொடுரமான ஸ்பானியர்களுடன் சொர்க்கத்தில் இருப்பதை விட நரகத்தில் இருப்பது சால சிறந்தது.” ஹாத்துவே தயக்கமின்றி உடனே உதிர்த்த வார்த்தைகள்.

நம்முடைய கடவுளுக்கும், நம்பிக்கைக்கும் நம்மினத்தவர்கள் சம்பாதித்து கொடுத்த பெயர் இதுதான் என வருத்தப்படுகிறார் இந்த குறிப்பெழுதிய மதகுரு.

தீ படர்ந்தது, ஒரு நாயகன் உருவானன்.

ஹாத்துவே இன்றைக்கும் கியூபா வரலாற்றில் முதலில் போர்கொடி உயர்த்திய மாவீரனாக போற்றப்படுகிறான்.

பி.கு.1.: என் பார்வையில் ஹாத்துவேவிற்க்கும், சே குவாராக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இருவரும் கியூபா நாட்டை சேராதவர்கள், ஆனால் கியூபா நாட்டினரால் போற்றப்படும் மாபெரும் வீரர்கள்.

பி.கு.2: ஜியோகிரபியில் கொஞ்சம் வீக்கானவர்கள் மேலே உள்ள வரைபடத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த கட்டுரை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகும்.

தொடரும்....

No comments:

Post a Comment