Wednesday, August 26, 2009

கிணறு



சேலத்திலிருந்து தருமபுரிக்கு என் பெற்றோர் குடிபெயர்ந்த நேரம். நான் நான்காம் வகுப்பு, என் அண்ணன்கள் இருவரும் ஆறு மற்றும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். ஏதோ காரணத்திற்காக மதியம் பள்ளிக்கு விடுமுறை. வீட்டிற்க்கு வந்தால், வீடு பூட்டி இருந்தது.

அம்மா மார்கெட் போயிருப்பதாய் பக்கத்து வீட்டில் தெரிந்து கொண்டு, அங்கேயே பையை வைத்து விட்டு, மூவரும் பக்கத்து வயல்களில் தும்பி, பட்டாபூச்சி பிடிக்க கிளம்பி விட்டோம்.

கடைசியில் போய் சேர்ந்தது வயலுக்கு நீர் இரைக்கும், பெரிய இரட்டை கிணறு. சேலத்திலிருந்த வரை இது மாதிரி கிணறையோ வயல்வெளிகளையோ பார்த்ததில்லை, அதில் விளையாடியதில்லை. தண்ணீர் குறைந்து இருக்கும் போது தான் அது இரட்டை கிணறு, நீர் நிறைந்த நாட்களில் அது மிகப் பெரிய கிணறு. இருவர் ஒரு சேர இறங்கி ஏற, கிணறு வெட்டும் போதே பாதை அமைத்து இருந்தார்கள்.

ஒருபக்கம் ஒரு முதியவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் காலியாக இருந்தது. இறங்கினோம், யாருக்கும் நீச்சல் தெரியாது. அண்ணன்களின் பேச்சை கேட்காமல், கைகால் கழுவுகிறேன் என்று, நீருக்குள் முழுகி பாசிபடந்திருந்த கல்லில் கால் வைத்தேன், அது வழுக்கி விட, தலை கீழாக நீருக்குள் விழுந்தேன், அண்ண‌ன்க‌ளின் குய்யோ, முய்யோ க‌த்த‌ல் க‌டைசியாக‌ மெதுவாக‌ கேட்ட‌து.



கண்விழித்து பார்த்த போது, அந்த பெரியவர் என் வயிற்றை அழுத்தி, முதல் உதவி செய்து கொண்டிருந்தார், கிண‌ற்றை சுற்றி மக்கள் கூட்டம். ஒருவர் அண்ணன்கள் இருவரையும், குச்சி வைத்து வெளுத்துக் கொண்டிருந்தார். இருவரும் அழுது கொண்டே பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

"நீச்சல் தெரியாத சின்ன பையனை கிணத்துல தள்ளி கொல்ல பாக்குறீங்க... யார்ரா நீங்க?"

"ப‌க்க‌த்துல‌ தான் புதுசா குடிவ‌ந்திருக்கோம்"

"ப‌க்க‌த்துல‌ன்னா..."

"ந‌டேச‌ க‌வுண்ட‌ர் தெருவுல‌"

"இந்த‌ பைய‌னை ஏண்டா கிணத்துல தள்ளினிங்க‌?"

"எங்க‌ த‌ம்பிதான், விளையாட‌ வ‌ந்தோம், தெரியாம‌ த‌வ‌றி விழுந்துட்டான்"

எல்லாரும் ப‌ள்ளி சீருடை அணிந்திருந்தோம்.

"ப‌டிக்கிற‌ புள்ள‌ங்க‌ளுக்கு கிண‌த்துல‌ என்ன‌ விளையாட்டு? ம‌றுப‌டி உங்களை இந்த‌ ப‌க்க‌ம் பார்தோம், அவ்வ‌ள‌வு தான்.... ஒழுங்கா வீடு போய் சேருங்க" விரட்டிவிட்டார்கள்.

மூவ‌ரும், வெளியே வ‌ந்தோம். 'எல்லாம் இவ‌னால‌ தான், சொன்ன‌ கேட்டா தானே...' ந‌ங்கென்று த‌லையில் ஒரு 'கொட்டு' விழுத்தது, பெரிய‌ அண்ண‌னிட‌மிருந்து.

இப்போது அழுது கொண்டிருந்த‌து நான்.

மொத்த‌மாக‌ ந‌னைந்திருந்தேன், அப்ப‌டியே வீட்டுக்கு போனால், அர்ச்ச‌னையும், த‌ர்மஅடியும் தொட‌ரும், என்ன‌ செய்வ‌து என எல்லோருக்கும் யோச‌னை.

க‌டைசியாக‌ எல்லாரும் ஒரு ம‌ன‌தாக‌ எடுத்த‌ முடிவின் ப‌டி, மொத்த‌ ஆடைக‌ளையும் அவிழ்த்து, நான் ஒரு ம‌‌ர‌த்த‌டியில் ஒழிந்து கொள்ள‌, செடிகளின் மீது காய‌வைத்து மறுபடியும் போட்டுக்கொண்டு வீடுவ‌ந்து சேர்ந்தோம்.

வெற்றிக‌ர‌மாக‌ உண்மையை வீட்டில் ம‌றைத்து உல‌விக்கொண்டிருந்த, அடுத்த இரண்டாவது நாள், எங்க‌ள் குட்டு வீட்டில் க‌ழ‌னித‌ண்ணீர் எடுக்க‌ வ‌ந்தவ‌ளின் மூல‌ம் வெளிப‌ட்ட‌து.

எங்களை எங்க‌ள் வீட்டில் வைத்தே பார்த்த‌ அவ‌ர், 'ஏம்மா இந்த‌ புள்ளைங்க‌ உங்க‌ புள்ளைங்க‌ளா... அஞ்சு நிமிசம் விட்டிருந்தா, அன்னிக்கு, இந்த சின்ன புள்ள செத்திருக்கும்...' என ஆரம்பித்து எல்லாவற்றையும் என் அம்மாவிடம், போட்டு கொடுத்து விட்டு போய்விட்டார்.

என்ன நடக்க போகிறதோ என் ப‌ய‌ந்த என‌க்கு அம்மாவிட‌மிருந்து எந்த‌ எதிர்வினையும் வராதது அப்போது பெரும் சந்தோஷம். ஆனால், அவ‌ருடைய‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்கி இருந்ததற்கான அர்த்தம், அப்போது புரியவில்லை. ஒரு குழ‌ந்தைக்கு த‌ந்தையான‌ பின்பு இப்போது புரிகிற‌து.

அடுத்த வாரத்தில், ப‌க்க‌த்து வீட்டு மாமாவிட‌ம் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்ள‌ ஏற்பாடான‌து. அதன் பிறகு, ப‌ட‌த்தில் உள்ள‌து போல‌ ப‌ம்புசெட்டு ரூம் மேல் ஏறி கிண‌ற்றில் குதித்து விளையாடிய‌ நாட்க‌ள், இப்போதும் ப‌சுமையாக‌ நினைவில் இருக்கிறது.

மறக்காம பின்னூட்டம் போடுங்க சாமியோவ்...

6 comments:

  1. உங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்

    ReplyDelete
  2. அனுபவப் படைப்பு ஸூப்பரு! கொஞ்சம் கொஞ்சமா பில்டப் குடுத்துப் பொட்டுனு ஒரு செண்டிமெண்ட் டச் குடுத்தீங்களே சூப்பர்!

    ReplyDelete
  3. வணக்கம் தமிழினி, வரவிற்க்கு நன்றி, நிச்சயமா செய்யறேன்.

    ReplyDelete
  4. வணக்கம் சங்கா, ஏதோ அந்த பெரியவர் புண்ணியத்துல உங்களையெல்லாம் இப்ப இம்சை பண்ணிக்கிட்டுருக்கேன்

    ReplyDelete
  5. என்னை செதுக்கிய 7 நாட்கள், இது முதல் நாள் - மிச்சம் 6 நாட்கள் தொடரட்டும்

    ReplyDelete
  6. ராம், இது என்னை செதுக்கிய 7 நாட்கள் இல்லை, என்முழி பிதுங்கிய 7 நாட்களில் ஒன்று

    ReplyDelete