Sunday, December 24, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 5

கிடைத்த அடிமைகளை பிடித்துக்கொண்டு, முதல் முறை காலடி பதித்த தீவிற்கு வந்து பார்த்த போது தான் அவர்கள் கட்டி வைத்திருந்த சிறிய கோட்டையான லா நேவிடாட்(La Navidad), தரைமட்டமாக்கப் பட்டுக்கிடந்தது அம்பலமானது. அதில் தங்க வைக்கப்பட்டிருந்த 39 பேரும் காணவில்லை.

அந்த 39 பேரும் செவ்விந்திய பெண்களை தங்களின் அடிமைகளாக பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ் தரமாக நடத்தியதின் விளைவாக சர்ச்சை ஏற்பட்டு, அதனால் உண்டான போரில் கொல்லப்பட்டது கொலம்பஸின் குழுவிற்கு பின்னாளில் தான் தெரிந்தது.

கிடைத்த அடிமைகள் மற்றும், 1200 வீரர்கள் அனைவரும் துரிதமாக செயல் பட்டு, தரைமட்டமாக்கப்பட்ட கோட்டைக்கு பதிலாக புதிதாக ஒரு கோட்டையை சற்று பெரியதாகவே கட்டினார்கள். இம்முறை காலனி அமைப்பதும் ஒரு நோக்கமாக இருந்தபடியால், 12 கப்பல்களிலும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களையும் கொஞ்சம் கொண்டுவந்திருந்தார்கள். அதனால் கட்டுமான பணிகள் மல மலவென நடைப்பெற்றது. ஒரு தேவாலயம், கொலம்பஸ் ஆட்சி செய்வதற்கான அலுவலகம், வீரர்கள் தங்க அறைகள் என பல விஷயங்கள் உள்ளடக்கி இருந்தது அந்த கோட்டை. அக்கோட்டைக்கு, பயணத்திற்கு அனுமதி கொடுத்து பண உதவியும் செய்த ஸ்பெயின் ராணியின் நினைவாக லா இஸபெல்லா(La Isabella) என பெயரிடப்பட்டது. அந்த புதிய கோட்டையில் கொலம்பஸ் அட்மிரல் ஜெனரலாக பொறுப்பு ஏற்றுக்கொண்டு தன் ஆட்சியை தொடங்கினான். ஆட்சியை தொடங்கினான் என்பதைக்காட்டிலும், தங்க வேட்டைக்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்தான் என தான் கூறவேண்டும்.

கோட்டை அமைத்து செட்டில் ஆனவுடன், ஆரம்பித்த முதல் வேலை தங்கச்சுரங்கம் தோண்டியது. தோண்டும் வேலை செவ்விந்தியர்களுடையது எனவும், அவர்களை கண்காணிக்கும் வேலை ஸ்பானிய வீரர்களுடையது எனவும் சரி சமமாக பிரித்துக்கொண்டார்கள். பதினான்கு வயதை தொட்ட ஒவ்வொரு செவ்விந்திய ஆணும் கட்டாயமாக சுரங்கப்பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும். இல்லையெனில் நிச்சயமாக தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கும். எவ்வளவு உழைத்த போதும் கிடைக்கும் தங்கத்தின் அளவு மிகக்குறைவாக இருந்தது. இதனால், செவ்விந்தியர்கள் சரியாக உழைக்காமல் தங்களை ஏமாற்றுகிறார்கள் என நினைத்து கொலம்பஸ் ஒரு ஆணையிட்டான்.

அதாவது ஒவ்வொரு முன்று மாதத்திற்கும், சுரங்க பணியாளர்கள்(அடிமைகள்) ஒவ்வொருவரும் தங்கள் கணக்காக ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் தயாரிக்க போதுமான தாதுவை ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். அப்படி கொடுப்பவர்களுக்கு பரிசாக ஒரு பித்தளை காசு கிடைக்கும், அதை அவர்கள் தங்களின் கழுத்தில் அடையாளமாக அணிந்து கொள்ளலாம். பித்தளை காசு கிடைத்து, கழுத்தில் போட்டுக்கொண்டவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு நிம்மதி, தொடர்ந்து பணி செய்யலாம்.

சரி, ஆனால் இப்படி குறிப்பிட்ட அளவு தாதுவை ஒப்படைக்காதவர்களுக்கு எந்த பரிசும் கிடைக்கவில்லையா என்கிறீர்களா?

ஏன் இல்லை? பரிசு கிடைத்தது, அவர்களும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள அரசு கொடுத்த பரிசு, அவர்களின் துண்டிக்கப்பட்ட கைகள். ஆம், நீங்கள் படிப்பது உண்மைதான். குறிப்பிட்ட அளவு தாது கொடுக்க முடியாதவர்களின் கைகளை முழங்கை வரை வெட்டி அவர்களின் கழுத்திலேயே மாலையாக அணிவித்தார்கள்.

மேற்படி தண்டனையை மேற்பார்வைப்பார்த்து, தவறாமல் நிறைவேற்றியது கொலம்பஸின் சொந்த தம்பிகள். வெட்டு பட்ட கைகளுக்கு மருத்துவமும் கிடையாது. வெட்டு பட்ட கைகளிலிருந்து, இரத்தம் வெளியேறி இறந்தவர்கள் நிறைய பேர்.

இந்த தண்டனைக்கு பயந்து, மலைகளில் ஓடி ஒழிந்தவர்களின் முடிவு இதைவிட கொடூரமானது. தப்பியவர்களை பிடிக்க வேட்டை நாய்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய்கள் சாதாரணமானவை அல்ல, மனிதனின் ஒவ்வொரு இணைப்பையும் கடித்தே பிரித்து விடும் சக்தி வாய்ந்தது. அவைகளை, எதிர்த்து போராடவும் முடியாது, அவற்றின் பாதுகாப்பிற்காக, அதன் உடல் முழுதும், இரும்பினால் ஆன கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. வேட்டை நாயிடம் மாட்டி கதை முடிந்தவர்களின் உடலும் அந்நாய்களுக்கே சொந்தம். அவற்றின் இரையாக!!!

உயிருடன் இருக்கும் ஆண்களின் ஒரே கடமை சுரங்களில் தங்கத்தாதுவை சேகரிப்பது மட்டும் தான், அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கெடு. அம்மக்களுக்கு ஊசலாடும் கத்தி எப்போதும் தலை மீது தொங்கிக்கொண்டே இருந்தது. தங்கள் குடும்பத்திற்காக உழைக்க முடியாது, விவசாயம் செய்ய முடியாது, வேட்டையாட முடியாது அனைத்தும் பெண்களே செய்து, தங்கள் கணவனையும் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இதற்கிடையே வீரர்களின் இச்சைக்கும் பலியாக வேண்டும்.

அப்போதய கத்தோலிய கிருத்துவ மத போதனைப்படி, ஒரு கிருத்துவர் மற்றொரு கிருத்துவரை அடிமையாக பயன்படுத்தக்கூடாது. மத நம்பிக்கை கொண்ட கொலம்பஸ் இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வைக் கண்டுபிடித்தான். செவ்விந்தியர்களை மதம் மாற்ற பாதிரியார்களை அழைத்து வந்திருந்தாலும், அவர்களுக்கு ஞானஸ்தானம் செய்விக்காமல் பார்த்துக்கொண்டான். இதனால் மொத்த மக்கள் தொகையையும் அடிமைகளாக பயன்படுத்திக் கொள்ளலாமே!

தங்க தாது நிறைய கிடைக்காத மண்ணில், இக்கொள்ளையர்களின் ஆசைக்காக தங்கத்தாதுவை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்றால் எப்படி?

செவ்விந்திய ஆண்களின் முடிவு மூன்று வகையில் முடிந்தது. ஒன்று, தாது கிடைக்காமல் கைகள் வெட்டப்பட்டு இரத்தம் இழந்து உண்டானது ஒரு வகை, இரண்டாவது வகை, வேட்டை நாய்களால் கடி பட்டு கொடுரமுறையில் இறப்பது. அத்தேடு மட்டுமல்லாமல் அவற்றிற்கு இரையாகவும் ஆனது.

சிலர் இவ்விரு வகை கொடுமைகளுக்கு பயந்து மற்றொரு வகையை தேர்ந்தெடுத்தார்கள். அது தற்கொலை. ஆம் மாஸ் சூசைட் எனப்படும் முறையில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள். அப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள்.

இவையனைத்தும் கொலம்பஸின் தங்க மோகத்தால் உண்டான ஒரே ஒரு சட்டத்தத்தினால்!!!

கொடுமைகள் தொடரும்...

Sunday, December 17, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 4

செவிந்தியர்கள் சுமார் 13000 ஆண்டுகளுக்கு முன்பாகவே வட அமெரிக்காவும், ஆசியாவும் இணைந்திருந்த நிலப்பரப்பான Bering Strait வழியாக அமெரிக்க கண்டத்திற்குள் கால்நடையாக நுழைந்திருக்கலாம் என வரலாற்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். Bering Strait இப்போது ரஷ்யாவுக்கும் அலாஸ்காவிற்கும் இடைபட்ட சீற்றம் கொண்ட கடல் பகுதியாக உள்ளது.

ஐரோப்பியரின் வருகைக்கு முன்பே, வட அமெரிக்காவில் ஆரம்பித்து, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வரை பரவி இருந்தார்கள். வருடத்தின் பெரும்பகுதி பனியில் மூடிக்கிடக்கும் கனடா, பாலைவனம் போன்ற நியூ மெக்சிகோ, மத்திய அமெரிக்க சமவெளிகள், ப்ளோரிடா மற்றும் அதனை சுற்றி இருந்த அழகிய தீவுகள், அமேசான் காடுகள் என அந்தந்த நிலபரப்பு மற்றும் சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை அமைத்து கொண்டு பல குழுக்களாக வாழ்ந்து வந்தவர்கள்.

இன்றைய மெக்ஸிகோவின் மயன்(Mayan) இனத்தவரும், பெரு நாட்டின், இன்கா(Inca) இனத்தவரும் உன்னதமான நாகரிக வளர்ச்சி கண்டவர்கள். மத்திய அமெரிக்காவில் உள்ள பிரமீடுகளும், மயன் கோவில்களும், Machu Picchu (எந்திரன் கிளிமாஞ்சாரோ பாடல் Location) மலை நகரமும் இதற்கு சான்றுகள். உலகின் அதிகம் உற்பத்தியாகும் தானியத்தில் முதன்மையாக விளங்கும் மக்கா சோளத்தை (Corn) 7000 வருடங்களுக்கு முன்னமே காட்டுப் புற்களின் குருத்திலிருந்து படிபடியாக மேம்படுத்தி இன்றைக்கு நாம் உண்ணும் மக்கா சோளத்தினை உருவாக்கியவர்கள். உருளைகிழங்கை பல வருடங்களுக்கு பதப்படுத்தும் முறையை அறிந்து வைத்திருந்தார்கள்.

அளவற்ற இயற்கை வளம். எல்லோருக்கும் தேவைக்கு அதிகமாக எல்லாம் கிடைத்ததால், பஞ்சம் இல்லை, திருட்டு இல்லை, போலீஸ் இல்லை, நீதிபதியும் இல்லை. நிலப்பரப்பில் மட்டுமல்லாது, அவர்களின் வாழ்வியலிலும் அது ஒரு சொர்க்க பூமியாக விளங்கியது. நேர்மையின்மை என்பதே அவர்களின் அகராதியில் இல்லை என கொலம்பஸே குறிப்பிட்டுள்ளான்.

இரும்பினாலான கை, கால் விலங்கை காட்டி, இதைத்தான் எங்கள் நாட்டின் இராஜா இராணி அணிந்து கொள்வார்கள் எனக்கூறி, அவர்களின் தலைவனை நம்பவைத்து, சந்தேஷமாக அணிந்து கொள்ள சம்மதித்தவனை, விலங்கு பூட்டி சிறைப்பிடித்து கப்பலேற்றி அடிமையாக ஸ்பெயினுக்கு அனுப்பி இருக்கிறார்கள். செவ்விந்தியரின் வெள்ளேந்தித்தனத்திற்கும், ஐரோப்பியரின் நம்பிக்கை துரோகத்திற்க்கும் இதை விட ஒரு உதாரணம் இருக்கமுடியாது.

ஸ்பானியர்களை தொடர்ந்து வந்த அத்தனை ஐரோப்பியரும் இதைப்போன்ற துரோகத்தை தான் செய்து கொண்டிருந்ததால் ஸ்பானியர்கள் எனக் குறிப்பிடாமல், மொத்தமாக ஐரோப்பியர்கள் என்கிறேன். நம்நாட்டிலேயே, கோவாவை போர்ச்சுகீஸியரும், பாண்டிச்சேரியை பிரஞ்சுக்களும், மொத்த இந்தியாவை பிரிட்டிஷ் காரர்களும் பிடிக்க வில்லையா?

ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து ஐரோப்பா கொண்டுவரப்பட்டு, கருப்பினத்தவரை ஆடுமாடுகளை போல தெரு சந்தைகளில் விலை பேசும் அடிமை வியாபாரம் சர்வசாதாரணமாக நடந்து வந்த காலம் அது.

இந்தியாவிற்கு கடல் வழி கிடைக்கவில்லையென்றாலும், புதிய சொர்க்கபூமி கிடைத்திருக்கிறது. அங்கே அளவற்ற இயற்கை வளங்கள் மட்டும் இன்றி, நிறைய அடிமைகளும் கிடைப்பார்கள் எனக்கூறிய கொலம்பஸின் வாதத்தில் ஸ்பெயின் அரசுக்கு நாட்டமில்லை. காரணம் கப்பலில் ஸ்பெயினுக்கு வரும் வழியிலேயே பல செவ்விந்திய கைதிகள் இறந்து விடுவார்கள். புதிய உலகில் மூலம் கிடைக்கும் அத்துனை வருமானத்திலும் பத்து சதவீதம் மட்டும் தனக்கென்றும், மீதமுள்ள 90 சதவீதம் அரசுக்கு எனவும் கொலம்பஸின் ஆசை வார்த்தை பலிக்க ஆரம்பித்தது. தங்கள் இராஜியத்தின் எல்லைகளை அதிகப்படுத்தவும், பூலோக சொர்கத்தின் வளங்களை கொள்ளையடிக்கவும் எண்ணி, இரண்டாம் பயண திட்டத்தை ஒருவழியாக ஏற்றுக் கொண்டது ஸ்பெயின் அரசு. இம்முறையும் பயண செலவுகளுக்காக தங்கள் நாட்டின் ஜூஸ் (Jews) மதத்தவரின் சொத்துகளை அபகரித்தது.

கொலம்பஸ் சொன்னபடி ஒப்பந்தம் தயார் ஆனது, ஒப்பந்தத்தில் செவ்விந்தியரை கிருத்துவர்களாக மாற்றுவது என்பது ஒரு சரத்து மட்டுமே, மற்றபடி முழு ஒப்பந்ததில் பாதிக்கு மேல் கிடைக்கப்போகும் தங்கத்தை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதைப் பற்றித்தான் எழுதப்பட்டிருந்தது.

இம்முறை மூன்று படகுகள் இல்லை, 17 கப்பல்கள், 1200க்கும் மேற்பட்ட படை வீரர்கள், முக்கியமாக குதிரை மீதிருந்து, ஈட்டியால் தாக்கி அழிக்கும் பயிற்சி பெற்றவர்கள், மதம் மாற்ற 6 பாதிரியார்கள், எண்ணற்ற மனித மாமிசம் தின்னும் வேட்டை நாய்கள். அந்த கூட்டத்தில் ஒரே ஒரு பெண்கூட இல்லை. பின்னாளில் அத்தீவுகளில் செவ்விந்திய பெண்களிடம் அறங்கேறிய பாலியல் வெறியாட்டத்திற்கு கொலம்பஸின் இம்மாதிரியான கொள்கைதான் முழு முதற்க் காரணம்.

வேட்டையாட மர அம்புகளை வைத்திருக்கும்; புதியவர்களை அன்போடு உபசரிக்கும் அப்பாவிகளிடம் 'தங்கம் எங்கே?' எனக்கேட்கத்தான் மேலே சொன்ன இந்தனை படைகளும்.

இம்முறை வேறு தீவில் இறங்கிய அந்த கூட்டம், கண்ணில் பட்டவர்களை பிடித்து கைதியாக்கி கப்பலுக்குள் ஏற்றினார்கள். சுதந்திரமாக சுற்றித்திரிந்தவர்களை கைது செய்து, 'இனி நீங்கள் அடிமைகள், எங்கள் சொல்படித்தான் கேட்க வேண்டும்' என்ற ஐரோப்பியர்களின் கட்டளை அவர்களுக்கு விளங்கவில்லை. பிடிபட்டவர்களுக்கு அவர்கள் அடிமைகள் என்பதை உணர்துவதே ஐரோப்பியருக்கு கடினமான வேலையாக இருந்தது. ஆப்பிரிக்க அடிமை வியாபாரத்தில் முன் அனுபவம் கொண்ட கொலம்பஸுக்கே இது சவாலாக இருந்தது. கைதிகள் மிக மிக முரண்டு பிடித்தார்கள்.

இந்த பிரச்சனையை சமாளிக்க தனி ஆளாக பிடிக்காமல் அவர்களை குடும்பத்தோடு அடிமைகளாக பிடிக்க ஆரம்பித்தார்கள். இந்த அணுகுமுறை கொஞ்சம் வேலை செய்ய ஆரம்பித்தது. அடிமைகளும் நிறைய பேர் தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். முதல் நாளே 6 பேரை பிடித்து கப்பலுக்கு அடிமைகளாக கொண்டுவந்தவர்கள், அவர்களை தேடி வந்த 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளையும் பிடித்து கைது செய்து கப்பலில் ஏற்றினார்கள். கப்பலையே பார்த்திராத அவர்கள், வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு வந்தவர்களையும் கப்பலை சுற்றிக்காட்டுவதாக கூறி கைதியாக்கினார்கள்.

கைதியாக பிடிக்கும் போது, வாளால் குத்து பட்டு குடல் வெளியே தொங்கிக் கொண்டிருந்த ஒருவனை எப்படியும் பிழைக்க வைக்க முடியாது என உணர்ந்து, கடலில் தூக்கி போட்டு விட்டார்கள். அவன் ஒரு கையால் குடலை பிடித்துக்கொண்டு, மறுகையால் நீந்தி கொண்டு கரை சேர, அவன் தப்பித்தால் இவர்களின் உண்மை தெரிந்து விடும் என எண்ணி அவனை மீண்டும் கப்பலுக்கு பிடித்து வந்து கை கால்களை கட்டி, இம்முறை கப்பலின் மேல்தளத்திலிருந்து கடலில் தூக்கி போட, அந்நிலையிலும் அவன் தத்தளித்து கரை நோக்கி நீந்த, வெறுத்து போன படை வீரர்கள் நீந்திக்கொண்டிருந்தவனை கப்பலில் இருந்த படியே சுட்டுக் கொன்ற பின் தான் நிம்மதியடைந்தார்கள்
தொடரும்...

Friday, December 8, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 3

இவ்வளவு வெறியாட்டத்திற்க்கும் முதற்க்காரணம், கொலம்பஸின் போராசை தான். அடிப்படையில் அவன் ஒரு மாலுமி மற்றும் பிசினஸ் மேன்.

ஐரோப்பிய தொழில் செழிக்க முக்கியமானது, அது ஆசிய நாடுகளுடன் செய்துவந்த வர்த்தகம், அதிலும் செல்வம் கொழித்த, முன்னேறிய நாடுகளான இந்தியா மற்றும் சீனா. விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலைகளில் செழிப்பான இந்தியா மற்றும் சீனாவுடன் செய்து கொண்டிருந்த வர்த்தகத்தால் தான், வருடத்தில் பாதி நாட்கள் பனியில் மூடிக்கிடக்கும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த வர்த்தகத்திற்க்கு உதவியாக இருந்தது அப்போதய பல நாடுகளை இணைத்த சர்வதேச சாலையான 'சில்க் ரூட்'. சில்க் ரூட்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணையத்தில் தேடிப்பாருங்கள். வரலாற்று பிரியர்களுக்கு பல சுவாரசியமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றது.

அந்நாட்களில் முக்கியமாக மேற்காசிய நாடுகளில், மதம்சார்ந்த போர்கள் நடந்துக்கொண்டிருந்தது. குறிப்பாக கிருத்துவ இஸ்லாமிய நாடுகளுக்குள் அடிக்கடி போர் மூழும். இதில் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடம், Constantinople எனும் நகரம். இன்றைய துருக்கியின் தலைநகரான இஸ்தான்பூல் தான் இந்த Constantinople நகரம். அது 1453-ல் சக்தி வாய்ந்த இஸ்லாமிய ஓட்டமன் போரரசர்களின் கைவசம் வந்தது.

அவர்கள், சில்க் ரூட்டை கிருத்துவ நாட்டவருக்கு மூடிவிட்டார்கள், மாற்றுப்பாதை மத்தியதரைகடல் வழியாக எகிப்து, தொடர்ந்து தரைவழியாக செங்கடல், அப்புறம் செங்கடல் வழியாக அரபிக்கடல் மூலம் இந்தியா. அதற்க்கும் சாத்தியமில்லை, காரணம் அந்த பகுதிகளும் ஒட்டமன் பேரரசின் கீழே. மத்திய தரைகடலையும், செங்கடலையும் இனைக்கும் சூயஸ் கால்வாய் எல்லாம் அக்கலத்தில் இல்லை.

இதனால் ஓட்டமன் அரசுக்கு மேற்கே இருந்த ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரம் திண்டாட ஆரம்பித்தது.

அவர்களுக்கு தங்கத்திற்க்கு ஈடான மிளகு, மஞ்சள், பட்டை இலவங்கம் போன்ற spices வியாபாரம் மொத்தமாக படுத்துக்கொண்டது.

இதனால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்க்கு கடல் வழி என்பது உடனடி தேவையானது. இதுதான் age of discovery என்னும் ஒரு சகாப்தத்தை வரலாற்றில் உருவாக்கிவைத்தது.

உலகப்போர்கள் உலகின் தொழில் வளர்ச்சிக்கு உதவியதைப்போல, ஒருவகையில் age of discovery உருவாக மறைமுகக்காரணமாக இருந்த ஓட்டமன் மன்னர்களுக்கு உலகம் நிச்சயமாக கடமைப்பட்டிருக்கிறது.

இன்னிலையில் கொலம்பஸ் போர்சுகீசிய மன்னரை அணுகி தன்னுடைய 'மேற்கு புறமாக இந்திய கடல் வழி பாதை'(Enterprise of the Indies) திட்டத்தை முன் வைத்தான். அதை அவர் பொருட்டாக மதிக்கவில்லை. பின்னர் ஸ்பானிஸ் அரசை அணுகி, திட்டத்தை விவரித்தான். ஆனால், அங்கும் திட்டம் நிராகரிக்கப்பட்டது. காரணம், அதற்கு முன் உலகம் தட்டையானது என்றும், கடலில் போக போக பூமியின் விளிம்பை எட்டியதும், கீழே விழுந்துவிட்டுவோம் எனவும் நம்பிக்கொண்டிருந்தார்கள். பூமி தான் பிரபஞ்சத்தின் மையம் என்றும் அதை சுற்றித்தான் சூரியன் முதல் எல்லாக் கோள்களும் உள்ளது என நம்பிக்கொண்டிருந்தவர்கள், பூமி உருண்டை என சொன்ன குற்றத்திற்க்காக Bruno -வை உயிருடன் எரித்துக்கொன்று விட்டார்கள். அதன் பின் கலிலியோ வந்து நிரூப்பித்த பின்னும், அவரையும் குற்றாவாளியாகத்தான் பார்த்தார்கள்.

கொலம்பஸின் காலம், அதற்குப்பின் சில நூற்றாண்டுகள் ஆனதால், பூமி ஏறக்குறைய உருண்டை தானோ என ஏற்றுக்கொள்ள ஆரம்பித்த கால கட்டத்தின் தொடக்கம், ஆனால் யாரும் போய் பார்த்ததில்லை.

அட்லாண்டிக்கடலில் பயணித்தால், அது இந்தியாவின் கிழக்கு கடற்கரையை அடையும் என் கொலம்பஸ் நம்பினான். ஆனால் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது.

[பூமி தட்டையானது தான், இந்த உலக மக்களை ஒரு சிலர் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று பல கோஷ்டி இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்பவில்லையென்னால், https://wiki.tfes.org/The_Flat_Earth_Wiki பக்கத்தை போய் பாருங்கள். அவர்கள் பகல் இரவு, பருவ காலங்கள் இப்படியான விசயங்கள் தட்டையான பூமியில் எப்படி ஏற்படுகின்றது என விளக்கமாக கூறுகிறார்கள்.]

எது எப்படியோ, ஆசியாவிற்க்கு மேற்கு வழியாக கடல் வழி கண்டு பிடிப்பதற்கான திட்டம் இரண்டு முறை நிராகரிப்புக்குப்பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொலம்பஸை ஸ்பானிஸ் அரசி இசபெல்லா நம்பினாள். ஒரே பிரச்சனை இந்த பயணத்திற்கு ஆகப்போகும் மிகப்பெரிய பொருட்செலவு.

ஸ்பானிய King Ferdinand and Queen Isabella, அந்நாட்டு யூதர்கள் மற்றும் இஸ்லாமியரை கிருத்துவராக மாற கட்டளையிட்டனர். பெயருக்கு மாறியதாக கூறிக்கொண்டு, வீட்டிற்க்குள் தன் சொந்த மதத்தை பின்பற்றியவரை எரித்துக் கொன்றார்கள். அவர்களுடைய சொத்துக்களை நாட்டுடமை ஆக்க புதிய சட்டம் கொண்டு வந்து அவற்றை அபகரித்து விற்று பணம் தேற்றினர். ஒரு வேளை பயணம் தோல்வியடைந்தாலும் கஜானாவிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. வெற்றி பெற்றால் நாட்டிற்க்கு தொழில் வளம் மற்றும் வரலாற்றில் ஓர் இடம்.

ஒரு வழியாக ஆகஸ்ட் 3, 1492-ல் மூன்று சிறிய கப்பலில் (சாண்டா மரியா, பிண்டோ மற்றும் நினா அவற்றின் பெயர்) பயணத்தை தொடங்கினார்கள். உற்சாகமாக கிளம்பிய பயணம் 50 நாட்களுக்கு மேலாகியும் முடியாததால், பயணக்குழு சோர்வடைந்தது, பாதி பேர் திருப்பி போகலாம் என வழியுறுத்த ஆரம்பித்தார்கள். இதனை சமாளிக்க கொலம்பஸ் இரண்டு உத்திகளை கையாண்டான்.

எத்தனை நாட்கள் பயணம் செய்தோம் என்ற கணக்கை குழுவிற்கு குறைத்து மாற்றி அறிவித்துக்கொண்டிருந்தான்.

இன்னொன்று, முதலில் நிலப்பரப்பை பார்த்து சொல்பவர்களுக்கு, 10000 மார்வாடிகள்(அக்காலத்தில் கடலில் பணிபுரிபவரின் ஒரு வருடத்தைய ஊதியம்) என அறிவித்தான்.

கடைசியில் முதலில் நிலபரப்பை பார்த்தவனுக்கு அந்த பரிசை அளிக்காமல், தான் முதல் நாள் இரவே சிறிய ஒளியை அந்த நிலபரப்பில் பார்த்து விட்டேன் எனக் கூறி தானே வைத்துக்கொண்டது தனிக்கதை.

ஒருவழியாக இரு மாதத்திற்க்கும் மேலான அப்பயணம், அக்டோபர் 12, 1942 வெள்ளிக்கிழமை புதிய உலகை கண்டதும் முடிந்தது. கொலம்பஸ் காலடி வைப்பதற்கு 500 வருடம் முன்பே வட அமெரிக்கா கண்டத்தின் ஒரு பகுதியில் (இன்றைய கனடா நாடு) காலடி வைத்து ஒரு காலனியை உருவாக்கியவர் ஐஸ்லாந்தை சேர்ந்த எரிக்சன்(Leif Erikson). அவர் தான் முதலில் அமெரிக்காவை கண்டுபிடித்தவர், அவர் கொலம்பஸைப்போல வரலாற்றில் இடம் பிடிக்காததற்க்கு பல காரணங்கள். அதை விவரித்தால், நம்முடைய செவ்விந்தியர் கதையிலிருந்து விலகி விடும் என்பதால், வாசகளின் கூகுள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன்.


கொலம்பஸின் குறிப்பில் அவன் குறிப்பிட்டுள்ளது படி, அவன் ஆசியாவில் வந்து இறங்கிவிட்டதாகவும், அப்பகுதி ஜப்பான் அல்லது சீனாவிற்குட்ட பகுதியாக இருக்கலாம் எனவும், உள்ளே சென்றால் இந்தியாவை அடைந்து விடலாம் எனவும் இருக்கிறது.

விடியற்காலை கடற்கரையை அடைந்ததும், தங்கள் கொடியையும் சிலுவையையும் நட்டு வைத்து, அந்த பகுதியை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக வானத்தை நோக்கி கூவி அறிவித்தான்.

அப்போது தான் கூட்டம் கூட்டமாக கடற்கரையை நோக்கி அவர்கள் வரக்தொடங்கினார்கள். அவர்கள் ஆடையேதும் அனிந்திருக்கவில்லை. செந்நிறம் கொண்ட அவர்கள் புதிய மக்களை கண்டதும் உற்சாகமாக வரவேற்றார்கள்.

ஐரோப்பியர்கள் பின்னாளில் சென்ற இடங்களில் கூட எந்த இன செவ்விந்தியரும் அவர்களுக்கு எதிர்ப்பு காட்டவில்லை. பொதுவாக வரவேற்றார்கள் அல்லது பயந்து மலைகளில் ஓடிச்சென்று தஞ்சம் புகுந்து கொண்டார்கள். ஒரு சிலர் பெரிய கப்பலை பார்த்து கடவுளின் தேவ தூதர்களாக பார்த்தார்கள்.

இருவருக்குள்ளும் பொது மொழி சைகைகள் தான். அவர்களின் சைகைகளிலிருந்து, கொலம்பஸ் புரிந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளது, "மற்ற இனத்தை சேர்ந்த செவ்விந்தியர் எங்களை அடிமைகளாக பயன் படுத்துகிறார்கள்” என்பது. அது சரியோ தவறோ தெரியாது, ஆனால், "தீவை அடைந்த முதல் நாளே, இவர்கள் நமக்கும் நல்ல அடிமைகளாக இருப்பார்கள் என முடிவு செய்து, ஐந்து செவிந்தியர்களை அடிமையாக்கி படகில் வைத்துக்கொண்டோம்".

தங்களின் முதல் அடிமைகளிடமும், மற்றும் அடுத்து வந்த ஒரு நூற்றாண்டாக கேட்டுக்கொண்டிருந்த ஒரே கேள்வி, அவர்கள் காதில் அணிந்திருந்த "தங்கம் எங்கே?”

கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கை, "தங்கம் தான் சொர்க்கத்திற்கான ஒரே ஓரு நுழைவுசீட்டு, தங்கம் தான் இவ்வுலகில் எல்லாமே, அதை வைத்திருப்பவர் தங்கள் பாவங்களைக்கூட கழுவிவிட்டு, நரகத்திலிருந்து விடுபட்டு சொர்கம் சேரலாம் ” என்பது தான்.

அதனாலேயே தங்கத்தை அடைய எந்த பாவத்தையும் செய்ய தாயராகி மனித வேட்டையில் இறங்கினான்.
தொடரும்....

Saturday, December 2, 2017

செவ்விந்தியர்கள் கதை - இரத்தம் சிந்திய இன வரலாறு - பாகம் - 2

கொலம்பஸ் முதலில் காலடி பதித்த இடம், இன்றைய West Indies என அழைக்கப்படும் Haiti, Domini Republic மற்றும் Bahamas தீவுகள் தான். அந்த தீவுகளை இந்தியாவின் பகுதி என நினைத்தார்கள் அப்பயணக்குழு. அதனால் தான் அத்தீவுகள் west Indies ஆனது. (விவ்வியன் ரிச்சர்ட், ப்ரைன் லாரா, போன்ற கருப்பினத்தவர்களின் மூதாதையர்கள் அங்கே வந்து வாழம் காரணத்தை ஒரு தனித்தொடராக எழுதலாம்) மேற்கத்தைய உலகைப் பொறுத்தவரை நாமெல்லாம் இன்றளவும் East Indians தான்.

கொலம்பஸ் மேற்கொண்ட நான்கு பயணத்திலும், மெயின் லேண்ட் எனப்படும், வட அமெரிக்காவையோ அல்லது தென் அமெரிக்காவையோ தொட்டதில்லை. மேற்கிந்திய தீவுகள், கியூபா, மற்றும் சில மத்திய அமெரிக்க நாடுகளின் கிழக்கு கரையை மட்டும் தான்.

முதலில் அவன் எதிர் கொண்ட மக்கள், அரவாக், டைனோ மற்றும் லூக்கயன்(Arwaks, Tainos and Lycayans) இனத்தவர்கள் தான். இவர்கள் அன்பான, பழக இனிமையானவர்கள். புதிய மனிதர்களைக் கண்டதும், தங்களிடம் இருந்த பழங்கள், பருத்தி மூட்டைகள், கிளிகளைக் பரிசாக கொடுத்து வரவேற்றார்கள். அவர்களுக்கு பதிலாக கொலம்பஸூம் அவன் ஆட்களும் தந்த பரிசு, அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, அதை ஸ்பெயின் நாட்டின் காலனிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக அறிவித்து, அதன் கவர்னராக தன்னை அறிவித்துக்கொண்டது தான்.

தங்களின் காதுகளில் தங்க ஆபரணங்களை அணிந்திருந்த அரவாக் இனத்தவர் சிலரை, அந்த புதிய உலகத்தைப்பற்றியும், தங்கம் மற்றும் மற்ற விலைமதிப்புள்ள பொருட்களைப்பற்றியும் தெரிந்து கொள்ள ஆயுத பலத்தை கொண்டு வழுகட்டாயமாக அடிமைகளாக்கினார்கள்.

“செவ்விந்தியர்கள், கட்டுடல் கொண்ட சிறந்த தோற்றம் கொண்டவர்கள், அவர்களிடமிருந்தவற்றை தானாக முன்வந்து, எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள், அவர்களுக்கு ஆயுதங்களைப்பற்றி எதுவும் தெரியவில்லை, தெரிந்ததெல்லாம் வெறும் அம்பு மட்டும் தான், அதிலும் இருப்பு இல்லை, மூங்கில் போன்ற மரத்தால் ஆனது. எங்களின் இரும்பு வாளைக்கூட பிடிக்கத் தெரியாமல், கூர்மையான பகுதியை தொட்டுத் தூக்கி கைகளில் காயம் பட்டுக்கொண்டார்கள். அவர்கள், மிக சிறந்த வேலைக்காரர்களுக்கான தகுதிகளை பெற்றிருந்தார்கள். அதனால் தான், 50 பேர் கொண்ட எங்கள் குழுவினால், அவர்களை ஒட்டுமொத்தமாக ஆட்டிப்படைக்க முடிந்தது.” இப்படி ஆரம்பத்தில் குறிப்பிட்ட கொலம்பஸ், இரண்டாம் பயணத்திற்க்கு பின் ஐரோப்பியர்களின் படை பலத்தை அதிகரித்துக் கொண்ட பின்பு, “செவ்விந்தியர்கள் மனித மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள், தங்களிடம் மாட்டியவரின் இரத்தத்தை குடிக்கும் நாய்களை போன்ற மூக்கை உடையவர்கள்" என்று குறிப்பிடுகிறான்.

முதல் பயணத்தில் அழைத்து வந்த 39 பேரை விட்டு விட்டு, ஓரளவிற்க்கு கிடைத்த தங்கத்தையும், 500 செவ்விந்தியர்களை பிடித்துக்கொண்டு, ஸ்பெயின் புறப்பட்டான், “புதிய உலகத்தில் இது போன்ற, நம் சொல்படி கேட்கின்ற அடிமைகள் ஆயிரக்கணக்கில் கிடைப்பார்கள்" என் ஸ்பெயின் மன்னருக்கும், ராணிக்கும் காட்டி தன் அடுத்த பயணத்தை உறுதி செய்து கொண்டான்.

இரண்டாம் பயணத்தில், 1200 க்கும் மேற்பட்ட படை வீரகளையும், ஆயுதங்களையும், குதிரைகளையும் கொண்டுவந்து இறக்கினான். விட்டு சென்ற 39 பேரும் இறந்து விட்ட செய்தி கேட்டு, செவ்விந்தியர்களின் மீது கொலை வெறி தாக்குதலை தொடங்கினார்கள்.

ஒவ்வொரு கிராமமாக சென்று, கூடாரங்களில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தவர்களை கொத்து கொத்தாக வெட்டிக்கொன்றார்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், கர்பிணி பெண்கள் என் எந்த பாகுபாடும் காட்டவில்லை. கர்பிணி பெண்களின் வயிற்றை கிழித்து வளரும் சிசுவை தூக்கி எறிந்தார்கள். ஆயுதம் ஏதும் இன்றி செவ்விந்தியர்களால் எந்தவித எதிர்ப்பும் காட்டமுடியவில்லை. அதையும் மீறி எதிர்த்தவர்களை கும்பளாக பொதுவிடத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்றார்கள். கொதிக்கும் மிகப்பெரிய பாத்திரங்களில், குழந்தைகளை தூக்கி போட்டு வருங்கால சந்ததியை அழித்தார்கள்.

இவையெல்லாம், செவ்விந்தியர்களை வைத்து அடிமைகள் வியாபாரம் செய்து கொண்டிருந்த கொலம்பஸின் படையிலிருந்த ஒருவன், பின்நாளில், பாதிரியாராக மாறிய பின் எழுதிய குறிப்பில் இருப்பவை. இதை எழுதும் போது, என்கைகள் நடுங்குகிறது, அவ்வளவு அரக்கத்தனம் அரங்கேரியது அன்று என குமுறுகிறார். மேலும் குறிப்பிடும் போது,

வீரர்கள், பால் குடிக்கும் பச்சிளம் குழந்தையின் கால்களை பிடித்து, தாயின் மார்பிலிருந்து பிரித்து, தலையை பாறைகளில் மோதி கொன்று ஆற்றில் தூக்கி எறிந்தார்கள்.

தங்களின் வாள்களின் கூர்மையை சோதிக்க வேண்டி, பலரை துடிதுடிக்க வெட்டி வீழ்த்தியிருக்கிறார்கள். ஒரே வெட்டில், செவ்விந்தியரின் உடலை இரண்டாக வேண்டும் என தங்களுக்குள் போட்டி வைத்துக்கொண்டு, அதை நடத்தியும் காட்டினார்கள்.

பொழுது போக்கிற்க்காக, கிளிகளை வைத்து கொண்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கிளிகளை பிடுங்கிக்கொண்டு, அவர்களின் தலைகளை துண்டித்து இருக்கிறார்கள், இதற்கு அவர்கள் கொடுத்த காரணம், “Just for fun”.

இவையல்லாமல், அவ்வினப் பெண்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடுமைகள் கட்டுக்கடங்காதவை. ஒரு கிராமத்திற்க்கு சென்று, மொத்த கூடாரத்தையும் அழிக்கும் முன், அந்த கூட்டத்தில் உள்ள அழகிய பெண்களை, தனியாக பிரித்து விரர்கள் தங்களின் அறைகளில் அடைத்து வைத்து பாலியல் அடிமைகளாக பயன்படுத்திக்கொண்டார்கள். 9 வயது தாண்டிய எந்த பெண்களையும் விட்டுவைக்கவில்லை. இதனால், 9 மற்றும் 10 வயது மதிக்க தக்க சிறு பெண் குழந்தைகளை அடிமையாக்கி கொள்ள வீரர்களுக்குள் போட்டா போட்டி அதிகபடியாக இருந்தது.

அடங்க மறுத்தவர்கள், தேவை தீர்ந்த பின் வேட்டை நாய்களுக்கு உணவாக அளிக்கப்பட்டார்கள்.

"வீரர்களால் பிடிபட்ட ஒரு பெண்ணை கொலம்பஸின் பரிசாக, படகில் உள்ள என் அறையில் எனக்காக நிர்வாணமாக அனுப்பி வைத்தார்கள். அவளிடம் என் விருப்பத்தை வெளிப்படுத்த, அவள் அதற்கு சம்மதிக்காமல், தன் நகங்களைக் கொண்டு போராடி, எதிர்ப்பு தெரிவித்தாள். கோபம் கொண்ட நான் சாட்டை எடுத்து விலாசிய விலாசில், நான் இதுவரை கேட்டிராத மரண ஓலத்தை எழுப்பி அடங்கிப்போனாள். அதன் பின்பு அவள் என்னிடம் ஒரு தேர்ந்த விபச்சாரி போல் சிறப்பாக நடந்து கொண்டாள்.” கொலம்பஸின் நண்பரான Michele De Cuneo, மேலே குறிப்பிடும் சம்பவம் ஒரு உதாரணம்.

இந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க, தாய்மார்கள் தங்களின் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தங்களையும் மாய்த்துக்கொண்டார்கள். இக்கொடுமைக்கு அஞ்சி மாஸ் சூசைட் மூலமும் பல கிராமங்கள் காலியானது.

அத்தீவில்(Haiti), 1492-ல் 250,000 ஆக இருந்த செவ்விந்தியரின் மக்கள் தொகை முதல் இரண்டு ஆண்டுகளில், பாதியாகவும், 1515-ல் 50,000 ஆக மாறியது. 1550-ல் வெறும் 500 ஆக மாறிய அந்த எண்ணிக்கை, 1650 மொத்தமாக அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இப்படி பலவாறாக, கொன்று குவித்து இனத்தை அழித்து விட்டு, அம்மை நோய் தாக்கி இறந்து விட்டதாக இக்கால குழந்தைகளுக்கு பள்ளி பாடங்களில் வரலாறு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறது மேற்கத்திய உலகம்.

தங்கம் தேடிப்போன கொலம்பஸுக்கு தங்கம் கிடைத்ததா? எவ்வளவு கிடைத்தது. அதற்கு, அவர்கள் மேற்கொண்ட அழிச்சாட்டங்கள் என்னன்ன? அவனை இந்த வேட்டைக்கு யார் அனுப்பினார்கள்? வாருங்கள் பார்க்கலாம் வரும் வாரங்களில்...